அந்தேவனப்பள்ளியில் ரேஷன் கடை திறக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு


அந்தேவனப்பள்ளியில் ரேஷன் கடை திறக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 14 Sep 2019 10:15 PM GMT (Updated: 14 Sep 2019 9:02 PM GMT)

அந்தேவனப்பள்ளியில் ரேஷன் கடை திறக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேன்கனிக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அந்தேவனப்பள்ளி கிராமத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் பணிபுரியும் விற்பனையாளர் அத்தியாவசிய பொருட்களான விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவை வினியோகம் செய்யப்படுவது இல்லை என கூறப்படுகிறது. மேலும் கடந்த 3 நாட்களாக விற்பனையாளர் கடையையும் திறப்பது இல்லை என கூறப்படுகிறது.

ரேஷன் கடையை திறக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி சாலையில் அந்தேவனப்பள்ளி கிராமத்தில் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய் ஆய்வாளர் பேபி, கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் தேன்கனிக்கோட்டை போலீசாரும் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ரேஷன் கடை திறக்காதது தொடர்பாக விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து ரேஷன் கடை திறக்கப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டன. இதன் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story