உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க அரசின் முன்னோடி திட்டங்களில் கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் - வேளாண் இயக்குனர் அறிவுரை


உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க அரசின் முன்னோடி திட்டங்களில் கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் - வேளாண் இயக்குனர் அறிவுரை
x
தினத்தந்தி 15 Sept 2019 4:15 AM IST (Updated: 15 Sept 2019 2:32 AM IST)
t-max-icont-min-icon

உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசின் முன்னோடி திட்டங்களில் கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வேளாண் இயக்குனர் அறிவுரை கூறினார்.

விழுப்புரம்,

விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உணவு தானிய உற்பத்தி பணியில் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் நடை முறைப்படுத்த வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வேளாண் இயக்குனர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கி ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த ஆண்டு இதுவரை உணவு தானிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட பரப்பு மற்றும் மகசூல் விவரங்கள் குறித்தும், எதிர் வரும் பருவத்தில் சாகுபடிக்கு கொண்டு வரப்பட உள்ள பரப்பு, அதற்காக தேவைப்படும் விதைகள், இடுபொருட்கள் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வட்டார அளவில் ஒவ்வொரு உணவு தானிய பயிர்களிலும் ஒரு ஹெக்டேரில் கிடைக்கக்கூடிய சராசரி மகசூலுக்கும் குறைவாக பெறப்படும் கிராமங்களை கண்டறிந்து உரிய தொழில்நுட்பங்கள் மூலமும், மத்திய, மாநில அரசின் முன்னோடி திட்டங்களான பிரதம மந்திரி கிசான் சமான் நிதி திட்டம், சிறு, குறு விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், பயிர் சாகுபடி செய்ய தேவைப்படும் கடன் உதவி பெறும் திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் அந்தந்த கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கியும் மகசூல் திறனை உயர்த்த வேண்டும்.

பல்வேறு வேளாண் திட்டங்கள் மற்றும் வேளாண்மைத்துறை நடவடிக்கைகள் மூலம் மாநிலத்தில் உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கவும் அரசின் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அவர்களிடையே வேளாண் அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சாகுபடி செய்யப்படும் பயிர்களை முறையாக கணக்கிடுவதற்கு ஏதுவாக விடுபாடின்றி அடங்கலில் பதிவு செய்யவும், இதற்காக தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள இ-அடங்கல் செயலியை அனைத்து கள அலுவலர்களும் பதிவிறக்கம் செய்து சாகுபடி பரப்பினை முழுமையாக அதிகரிக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வேளாண் கூடுதல் இயக்குனர் (பொறுப்பு) சங்கரலிங்கம், வேளாண்மை இணை இயக்குனர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் விழுப்புரம் வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ராமசாமி நன்றி கூறினார்.

Next Story