திருவண்ணாமலையில் இன்று தி.மு.க. முப்பெரும் விழா - மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்


திருவண்ணாமலையில் இன்று தி.மு.க. முப்பெரும் விழா - மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்
x
தினத்தந்தி 15 Sept 2019 4:45 AM IST (Updated: 15 Sept 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்.

திருவண்ணாமலை,

தி.மு.க. சார்பில் முரசொலி அறக்கட்டளை மூலம் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நிதியளிப்பு, சிறந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நற்சான்று, பண முடிப்பு பதக்கம் வழங்கும் விழா, கலைஞர் அறக்கட்டளை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 4 மண்டலத்தில் சிறப்பாக செயல்படும் ஊராட்சி செயலாளர் ஒருவருக்கும், சிறப்பு சாதனை புரிந்த 3 பேருக்கும் கழக விருது மற்றும் இளம் சாதனையாளர் விருது, பணமுடிப்பு வழங்கும் விழா மற்றும் தி.மு.க. சார்பில் பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கலைஞர் திடலில் நடைபெறுகிறது.

விழாவுக்கு கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார். கட்சியின் பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமிஜெகதீசன், வி.பி.துரைசாமி ஆகியோர் விருது பெறுபவர்களை வாழ்த்தி பேசுகின்றனர்.

விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு த.வேணுகோபாலுக்கு பெரியார் விருது, சி.நந்தகோபாலுக்கு அண்ணா விருது, ஏ.கே.ஜெகதீசனுக்கு கலைஞர் விருது, சித்திரமுகி சத்தியவாணிமுத்துக்கு பாவேந்தர் விருது, தஞ்சை இறைவனுக்கு பேராசிரியர் விருது வழங்குகிறார்.

மேலும் மாணவ, மாணவிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், இளம் சாதனையாளர்கள் ஆகியோருக்கு பணமுடிப்பு, சான்றுகள் வழங்கி வாழ்த்தி சிறப்புரையாற்றுகிறார். முடிவில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம் நன்றி கூறுகிறார்.

விழாவை முன்னிட்டு காலை 10 மணிக்கு கவியரங்கம் நடைபெறுகிறது. இதில் கனிமொழி எம்.பி., கவிஞர் பா.விஜய் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். 11 மணிக்கு பட்டிமன்றம் நடைபெறுகிறது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மற்றும் பலர் கலந்துகொள்கின்றனர். பிற்பகல் 3 மணிக்கு திரை இசையரங்கம் நடைபெறுகிறது. இதில் திருச்சி என்.சிவா எம்.பி., கலந்துகொள்கிறார்.

விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரமாண்ட அலங்கார பந்தல் அமைக்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் எ.வ.வேலு தலைமையில் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலைக்கு வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் மாவட்ட செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ., தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

Next Story