2 பேர் பணியிடை நீக்கத்தை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் - பணிகள் பாதிப்பு
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 394 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி,
ஆண்டிப்பட்டி ஒன்றிய பகுதிகளில் நீர்நிலைகள் தூர்வாரும் பணியை சரியாக செய்யாமலும், மாவட்ட நிர்வாகத்துக்கு தவறான தகவல்கள் கொடுத்ததாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபத்ரா உள்பட 2 பேரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் கடந்த 14-ந்தேதி தேனியில் நடந்தது.
இதில், பணியிடை நீக்கத்தை கண்டித்தும், இந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாவட்டம் முழுவதும் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தேனி மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை முகமை திட்ட அலுவலகம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் தேனி, ஆண்டிப்பட்டி, போடி, பெரியகுளம், சின்னமனூர், கடமலை-மயிலை, உத்தமபாளையம், கம்பம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் அலுவலர்கள் நேற்று ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்தனர். அத்துடன் கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் செயலாளர்களும் இந்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையில் மொத்தம் 412 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 394 பேர் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து இருந்தனர். இதனால், அலுவலகங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. அலுவலக பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.
Related Tags :
Next Story