ரூ.3 கோடி மோசடி வழக்கு: தொண்டு நிறுவன தலைவர், உறுப்பினருக்கு தலா 5 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு
ரூ.3 கோடி மோசடி வழக்கில் தொண்டு நிறுவன தலைவர் மற்றும் உறுப்பினருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கோவை,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ரீச் இன் நீலகிரி சொ சைட்டி என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் தலைவராக மார்கோ, உறுப்பினராக ஞானக்கண் ஆகியோர் இருந்தனர். இந்த நிறுவனம் சார்பில் ஏழை-எளிய குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது.
இதற்காக இந்த நிறுவனத்துக்கு பல்வேறு அமைப்புகள் உதவிக்கரம் நீட்டின. இந்த நிலையில் கடந்த 1992-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை வெளிநாட்டில் இருந்து ரூ.3 கோடி நிதி வழங்கப்பட்டது. இந்த நிதியை தலைவர் மார்கோ மற்றும் உறுப்பினர் ஞானக்கண் ஆகியோர் மோசடி செய்து தங்கள் வங்கி கணக்கில் சேர்த்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை தலை மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் மார்கோ, ஞானக்கண் ஆகியோர் ரூ.3 கோடியை முறைகேடாக தங்கள் வங்கி கணக்கில் சேர்த்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.51 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பு வழங்கினார்.
Related Tags :
Next Story