நொய்யல் அருகே தேங்காய் நார் ஆலையை பொதுமக்கள் முற்றுகை


நொய்யல் அருகே தேங்காய் நார் ஆலையை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 17 Sep 2019 11:00 PM GMT (Updated: 17 Sep 2019 7:24 PM GMT)

நொய்யல் அருகே தேங்காய்நார் ஆலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

நொய்யல்,

கரூர் மாவட்டம், நொய்யலை அடுத்த குந்தாணிபாளையம் அருகே செட்டித்தோட்டத்தில் தனியாருக்கு சொந்தமான தேங்காய்நார் ஆலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிணறுகளின் நீர்மாசு அடைந்துள்ளது. இதனால் அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இது குறித்து குந்தானிபாளையம், நத்தமேடு, குப்பம், ஐயம்பாளையம், நடுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இன்னும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனை கண்டித்து நேற்று அப்பகுதி மக்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆலையின் நுழைவுவாயில் முன்பு பந்தல் அமைத்து அங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த புகளூர் தாசில்தார் சிவக்குமார், அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், மண்டல துணை தாசில்தார் தனசேகரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் பாலசக்கரபானி, கிராம நிர்வாக அலுவலர் பூபதி ஆகியோர் கொண்ட குழுவினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை

அப்போது தேங்காய் நார்க்கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், தேங்காய் நார் தயாரிக்கும் ஆலையில் உள்ள கழிவுநீரால் குடிநீர் மாசுபடுவதைத் தடுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். பேச்சுவார்த்தை மாலை 3 மணி வரை நடைபெற்றது. கூட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்த பிறகு அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story