கோவில்பட்டியில் நாளை மறுநாள் முதல் போக்குவரத்து மாற்றம் - ஆலோசனை கூட்டத்தில் முடிவு
கோவில்பட்டியில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்வது என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி நகரில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம், உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. உதவி கலெக்டர் விஜயா தலைமை தாங்கினார்.
துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், தாசில்தார் மணிகண்டன், மோட்டார் வாகன ஆய்வாளர் பாத்திமா பர்வீன், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் நாராயணன், அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளை மேலாளர் பொன்ராஜ், மினி பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் ராஜகுரு, முத்தால்ராஜ், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை, மதுரை செல்லும் புறநகர் பஸ்கள், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அண்ணா பஸ் நிலையம் வழியாக செல்ல வேண்டும்.
மினி பஸ்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து கூடுதலாக எந்த பஸ்சும் அண்ணா பஸ் நிலையத்தில் நிறுத்த கூடாது. அனுமதிக்கப்பட்ட மினி பஸ்களின் கால அட்டவணையை அண்ணா பஸ் நிலையத்தில் வைக்க வேண்டும்.
அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் வழியாக கூடுதல் பஸ் நிலையத்துக்கு சர்குலர் பஸ் இயக்க வேண்டும். சாத்தூர், கோவில்பட்டி வழித்தடங்களில் இயங்கும் நகர பஸ்களில் குறிப்பிட்ட அளவு பஸ்கள் கூடுதல் பஸ் நிலையம் வழியாக அண்ணா பஸ் நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும். அண்ணா பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சுவர்களை அகற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story