ஆத்தூர் அருகே வனப்பகுதியில் கள்ளக்காதலனை அடித்து துரத்தி விட்டு பெண் பலாத்காரம்; 6 பேர் கும்பல் கைது


ஆத்தூர் அருகே வனப்பகுதியில் கள்ளக்காதலனை அடித்து துரத்தி விட்டு பெண் பலாத்காரம்; 6 பேர் கும்பல் கைது
x
தினத்தந்தி 18 Sept 2019 4:00 AM IST (Updated: 18 Sept 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே வனப்பகுதியில் கள்ளக்காதலனை அடித்து துரத்தி விட்டு 6 பேர் கொண்ட கும்பல் பெண்ணை பலாத்காரம் செய்து வெறிச்செயலில் ஈடுபட்டது. அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பற்றி போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

பெத்தநாயக்கன்பாளையம்,

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள சின்னமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 25). திருமணமான இவர், அந்த பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அதே கம்பெனியில் வேலை பார்க்கும், திருமணமான 32 வயது பெண்ணுடன் தினேசுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் ஆத்தூர் அருகே நெய்யமலை காப்புக்காடு வனப்பகுதிக்கு சென்றனர். அங்கு அடிவாரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அவர்கள் இருவரும் வனப்பகுதிக்கு சென்று தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே 6 பேர் கொண்ட கும்பல் அடிவாரப்பகுதிக்கு வந்தது. அங்கு அவர்கள் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருப்பதை பார்த்து அதில் டேங்க் கவரை சோதனையிட்டனர். அதில் தினேசின் ரேஷன்கார்டு மட்டும் இருந்துள்ளது. உடனே அந்த ரேஷன்கார்டை எடுத்துக்கொண்டு அந்த கும்பல் வனப்பகுதிக்குள் செல்ல முயன்றது. அதேநேரத்தில் வனப்பகுதியில் தனிமையில் பேசிக்கொண்டு இருந்து விட்டு தினேசும், அவருடைய கள்ளக்காதலியும் வெளியே வந்துள்ளனர். உடனே தினேசை மிரட்டிய அந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. அப்போது அவருடன் வந்த பெண், தினேசை விட்டு விடுங்கள் என்று அந்த கும்பலிடம் கெஞ்சி உள்ளார்.

ஆனால் மீண்டும் தினேசை சரமாரியாக தாக்கிய அந்த 6 பேரும் அவரை அடித்து துரத்தி விட்டு, அந்த பெண்ணை மட்டும் வனப்பகுதிக்குள் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றனர். அங்கு அந்த பெண், ‘என்னை விட்டு விடுங்கள், இனிமேல் இங்கு வர மாட்டேன்’ என்று கதறி அழுதுள்ளார்.

ஆனால் அவரின் கூக்குரலை சட்டை செய்யாத அந்த கும்பல் அவரை மாறி, மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் அடிவாரத்தில் தாக்குதலுக்கு உள்ளான தினேஷ், அந்த பகுதியில் சென்றவர்களிடம் நடந்த விவரங்களை கூறி வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். பொதுமக்கள் வருவதை பார்த்த அந்த கும்பல் வனப்பகுதியில் இருந்து தப்பிச்சென்று விட்டது.

இதைத்தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து அந்த பெண் ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும், வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி நேரில் சென்று விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் அவர், ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். மேலும் சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி, அடித்து துன்புறுத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி, வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தலைமறைவான 6 பேர் கொண்ட கும்பலை தேடி வந்தனர். இந்த சம்பவம் குறித்து அந்த பெண் கொடுத்த விவரங்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் வாழப்பாடி, ஏத்தாப்பூர், தாண்டானூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

மேலும் நெய்யமலை காப்புக்காட்டு பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த 4 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் வாழப்பாடி அருகே உள்ள எடப்பட்டி பகுதியை சேர்ந்த அழகேசன் (29), சேதுபதி(23), தாண்டானூர் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் (23), கோகுல் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் அந்த பெண்ணை வனப்பகுதியில் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த கும்பலை சேர்ந்த 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி ஓடிய மேலும் 2 பேர், தாண்டானூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன், எடப்பட்டியை சேர்ந்த கலையரசன் ஆகியோர் என்பது பிடிபட்ட 4 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் அவர்கள் இருவரையும் ஏத்தாப்பூர் போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். வனப்பகுதிக்குள் சென்ற பெண்ணை, 6 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஆத்தூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story