மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 18 ஆயிரம் பேர் விண்ணப்பம்


மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 18 ஆயிரம் பேர் விண்ணப்பம்
x
தினத்தந்தி 19 Sept 2019 4:00 AM IST (Updated: 19 Sept 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு 18 ஆயிரத்து 608 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தேனி,

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 1-1-2020-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் நடக்க உள்ளன. அதையொட்டி முன்சுருக்கத் திருத்தப் பணியாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டப் பணிகள் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. வருகிற 30-ந்தேதி வரை இந்த சரிபார்ப்பு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர் உதவி செயலி, தேசிய வாக்காளர் சேவை திட்ட இணையதளம், பொது சேவை மையங்கள், வாக்காளர் சேவை மையம் ஆகியவற்றின் மூலமும் வாக்காளர்கள் தங்களின் விவரங்கள் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளலாம். திருத்தம் ஏதேனும் செய்ய வேண்டியது இருந்தால் அதற்கு உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

18,608 பேர் விண்ணப்பம்

தேனி மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 71 ஆயிரத்து 174 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டி இதுவரை 18 ஆயிரத்து 608 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதில், வாக்காளர் உதவி செயலி மூலம் 12 ஆயிரத்து 178 பேரும், தேசிய வாக்காளர் சேவை திட்ட இணையதளம் மூலம் 129 பேரும், பொது சேவை மையங்கள் மூலம் 322 பேரும், வாக்காளர் சேவை மையம் மூலம் 5 ஆயிரத்து 979 பேரும் படிவங்கள் பூர்த்தி செய்து அளித்துள்ளனர்.

தொடர்ந்து வருகிற 30-ந்தேதி வரை சரிபார்ப்பு திட்டப் பணிகள் நடப்பதால் வாக்காளர்கள் தங்களின் பெயர் விவரங்கள் வாக்காளர் பட்டியலில் சரியாக உள்ளதா? என்பதை பார்வையிட்டு திருத்தம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அளிக்கலாம். இத்தகவலை தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Next Story