திருப்பூரில் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 52 பேர் கைது


திருப்பூரில் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 52 பேர் கைது
x
தினத்தந்தி 18 Sep 2019 10:00 PM GMT (Updated: 18 Sep 2019 9:41 PM GMT)

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 52 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், 

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் 1885-ம் ஆண்டு இந்திய தந்தி சட்டத்தை கைவிட வேண்டும். விவசாயிகளின் நில உரிமையை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும். ஏற்கனவே செயல்படும் திட்டங்களுக்கு மின் கோபுரத்திற்கும், கம்பி செல்லும் பாதைக்கும் மாத வாடகையும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும். புதியதாக செயல்படுத்தும் திட்டங்களை கேபிள் மூலமாக செயல்படுத்த வேண்டும்.

விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஏராளமான விவசாயிகள் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தனர்.

கலெக்டர் அலுவலகம் முன்பு வந்ததும், அவர்கள் சட்ட நகல்களை தீவைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

இதில் எஸ்.டி.பி.ஐ. மாவட்ட பொதுச்செயலாளர் ஹாரிஸ்பாபு மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர்கள் குங்குமபாளையம் முத்துசாமி, வாவிபாளையம் ஞானசிவ மூர்த்தி, சாலையூர் சிவசுப்பிரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷமிட்டனர். இதனைத்தொடர்ந்து சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 52 பேரை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story