விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: நாமக்கல்லில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் - விவசாயிகள் 55 பேர் கைது


விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: நாமக்கல்லில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் - விவசாயிகள் 55 பேர் கைது
x
தினத்தந்தி 19 Sept 2019 3:30 AM IST (Updated: 19 Sept 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லில் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 55 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல், 

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் 1885-ம் ஆண்டு சட்டத்தை கைவிட்டு, விவசாயிகளின் நில உரிமையை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரவேண்டும். புதிய மின் திட்டங்களை கேபிள் மூலமாக செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் நாமக்கல்லில் உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள், திடீரென சட்ட நகலை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 4 பெண்கள் உள்பட 55 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை பஸ்சில் ஏற்றி அழைத்துச்சென்று திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர்.

Next Story