பலத்த மழையால், அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன
தஞ்சை மாவட்டத்தில் பலத்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன. தஞ்சையில் வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
தஞ்சாவூர்,
வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
பகல் நேரங்களில் வெயில் அடிப்பதும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்வதுமாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு தஞ்சையில் கன மழை கொட்டியது. மாவட்டத்தின் பிற பகுதிகளான கும்பகோணம், திருவிடைமருதூர், திருவையாறு, பூதலூர், அணைக்கரை, அதிராம்பட்டினம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பரவலாக பெய்தது.
நேற்று காலையிலும் லேசான தூறலுடன் மழை பெய்தது. மதியம் மழை இன்றி வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. நடவு செய்யப்பட்ட 37 ஆயிரத்து 700 எக்டேரில் தற்போது வரை 20 ஆயிரம் எக்டேரில் அறுவடை நடந்துள்ளது. இன்னும் பல இடங்களில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.
இந்த நிலையில் மழை பெய்யத்தொடங்கி இருப்பதால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது எந்திரம் மூலம் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதாலும், வயல்களில் மழைநீர் தேங்கி இருப்பதாலும் எந்திரங்கள் வயலுக்குள் இறங்கி செல்ல முடியாத நிலை உள்ளது.
பலத்த மழை காரணமாக அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்து காணப்படுகின்றன. திருவையாறு, தஞ்சை, கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்து கிடக்கின்றன. வயல்களில் மழைநீர் தேங்கி உள்ளது. மழைநீர் வடிவதற்காக விவசாயிகள் நெய்பயிர்களை ஒதுக்கி வடிகால் ஏற்படுத்தி உள்ளனர்.
இதனிடையே சம்பா நடவு பணிகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. நடவு முடிந்து ஒரு சில நாட்கள் ஆன நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. சூரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்த நெற்பயிர்களில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி உள்ளது.
தஞ்சையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. தஞ்சை கொள்ளுப்பேட்டை தெரு மற்றும் சின்னையாபிள்ளை தெரு பகுதியில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் வடிவதற்கு போதுமான வசதி இல்லாததால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பாபநாசம் 78, திருவையாறு 53, அதிராம்பட்டினம் 53, கும்பகோணம் 51, திருவிடைமருதூர் 48, திருக்காட்டுப்பள்ளி 39, வல்லம் 35, அணைக்கரை 34, பூதலூர் 33, நெய்வாசல் தென்பாதி 33, தஞ்சை 31, குருங்குளம் 30, மஞ்சளாறு 25, பட்டுக்கோட்டை 23, ஒரத்தநாடு 22, அய்யம்பேட்டை 17, மதுக்கூர் 17, கல்லணை 16, ஈச்சன்விடுதி 15, வெட்டிக்காடு 10, பேராவூரணி 7.
Related Tags :
Next Story