‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் பெற்றோருடன் தலைமறைவு
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் பெற்றோருடன் தலைமறைவானார்.
தேனி,
சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் மகன் உதித்சூர்யா (வயது 19). இவர் 2019-2020-ம் ஆண்டுக்கான ‘நீட்’தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறி, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்றார். கலந்தாய்வின் போது அவருக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைத்தது. அதன்படி, அவர் மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.
இந்நிலையில், உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்து ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து க.விலக்கு போலீஸ் நிலையத்தில், தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் மாணவர் உதித்சூர்யா மீது மோசடி, சதித்திட்டம் தீட்டுதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே மருத்துவக்கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரணை நடத்தியதால், உதித்சூர்யா தனக்கு இங்கு படிக்க விருப்பம் இல்லை என்று கூறி தேனி மருத்துவக்கல்லூரியில் இருந்து வெளியேறி சென்றார். அதன்பிறகு அவர் கல்லூரிக்கு வரவில்லை.
வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், உதித்சூர்யாவை பிடித்து விசாரணை நடத்த ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் மேற்பார்வையில், ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேர் கொண்ட தனிப்படையை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த தனிப்படையினர் மாணவரை பிடித்து விசாரிப்பதற்காக சென்னை விரைந்தனர். ஆனால் சென்னையில் மாணவர் தங்கியிருந்த வீடு பூட்டிக் கிடந்துள்ளது. இதனால், அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
மாணவரின் தந்தை வெங்கடேசன் டாக்டராக உள்ளார். இந்த நிலையில் ஆள்மாறாட்டம் செய்தது வெளியே தெரியவந்ததால் மாணவர் தனது பெற்றோருடன் தலைமறைவாகி விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க தனிப்படையினர் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
மாணவர், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய சம்பவம் மும்பையில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் நடந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை ஆய்வு செய்யவும் தனிப்படையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மும்பைக்கும் தனிப்படை போலீசார் செல்ல உள்ளனர்.
மேலும் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர் யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தனிப்படையினரிடம் கேட்டபோது, ‘மாணவர் உதித்சூர்யா குடும்பத்துடன் தலைமறைவாக உள்ளார். அவர் சிக்கினால் தான் அவருக்காக தேர்வு எழுதியது யார்? என்பது தெரியவரும். தேர்வு எழுதியவர் மாணவரா? அல்லது டாக்டரா? என்பது எல்லாம் விசாரணைக்கு பின்பு தான் தெரியவரும். அதேநேரத்தில் ஹால்டிக்கெட்டில் உள்ள புகைப்படத்தை வைத்தும், அவர் யார்? என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது. அந்த ஆள்மாறாட்டத்துக்கு யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள் என்பதும் உதித்சூர்யாவை கைது செய்த பின்பு தான் தெரியவரும்’ என்றனர்.தேனி அரசு மருத்துவக்கல்லூரியில், மாணவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் ஏற்கனவே 2 முறை ‘நீட்’ தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால், ஏற்கனவே 2 முறை தேர்வை அவர் தான் எழுதினாரா? அல்லது அதிலும் ஆள்மாறாட்டம் நடந்துள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அவர் கடந்த 2 ஆண்டுகளில் ‘நீட்’ தேர்வு எழுத பயன்படுத்திய ஹால்டிக்கெட், தேர்வு எழுதிய மையங்கள், அந்த மையங்களில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் போன்றவற்றை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தவும் தனிப்படையினர் திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் மருத்துவத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story