கம்பம் போலீஸ் நிலையத்தில், ஜீப் உரிமையாளர்கள்-டிரைவர்களுடன் ஆலோசனை கூட்டம்
கேரள மாநிலத்திற்கு தோட்ட தொழிலாளர்களை ஏற்றி செல்லும் ஜீப் உரிமையாளர்கள், டிரைவர்களுடன் கம்பம் போலீஸ் நிலையத்தில் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
கம்பம்,
தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், கோம்பை, சின்னமனூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கேரள மாநிலத்தில் உள்ள குமுளி, சக்குபள்ளம், வண்டன்மேடு, நெடுங்கண்டம், மாலி, கட்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏலக்காய் மற்றும் காபி தோட்டங்களுக்கு தினமும் வேலைக்கு சென்று வருகின்றனர்.
அவர்கள் கம்பம்மெட்டு, போடிமெட்டு மற்றும் குமுளி ஆகிய மலைப்பாதைகள் வழியாக கேரளாவுக்கு சென்று வருகின்றனர். இவர்களின் வசதிக்காக கூடலூர், கம்பம், போடி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட ஜீப்கள் கேரள மாநிலத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 16-ந்தேதி போடிமெட்டு மலைப்பாதையில் கேரளாவில் இருந்து தொழிலாளர்களை ஏற்றி வந்த ஜீப் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து 5 பேர் பலியாகினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி ஆகிய மலைப்பாதைகளில் காலை, மாலை நேரங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஒரு ஜீப்பில் 15 முதல் 25 பேர் சென்று வந்த நிலையில் தற்போது வாகன உரிமைச்சான்றில் உள்ளபடி ஒரு ஜீப்பில் 3 முதல் 9 பேர் வரை மட்டுமே செல்கின்றனர். இதனால் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விதிகளை மீறி இயக்கப்பட்ட ஜீப் டிரைவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதனை கண்டித்து நேற்று முன்தினம் கூடலூர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சாலையில் ஜீப்களை நிறுத்தி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் ஜீப் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களுடன் ஆலோசனை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஜீப் உரிமையாளர்கள், டிரைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதற்கு உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னக்கண்ணு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், அதிக பயணிகளை ஏற்றி செல்லும்போது விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுகிறது. அதில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை கிடைப்பதில்லை. எனவே உரிய ஆவணங்களுடன் போக்குவரத்து விதிகள்படி ஜீப்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றி, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவேண்டும் என்றார்.
இதை தொடர்ந்து கூட்டத்தில் கூடலூர் ஜீப் உரிமையாளர்கள் சங்க தலைவர் பாஸ்கரன் பேசுகையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு ஜீப்பில் 9 பேர் முதல் 12 பேர் செல்ல மாவட்ட போலீஸ் துறை மூலம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. அதனை பின்பற்றுவதாகவும், வாகனங்களை முறையாக பராமரிப்பு செய்து கொள்வதாகவும், மது அருந்திவிட்டு ஜீப் ஓட்டும் டிரைவர்களை சங்கத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் சிலைமணி, கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story