மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் - ஆயிரம் பேர் பங்கேற்பு


மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் - ஆயிரம் பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 21 Sept 2019 3:45 AM IST (Updated: 21 Sept 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்மொழி தெரியாதவர்களும் சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

நாமக்கல், 

தமிழ்நாடு அரசுப்பணி தேர்வு ஆணையத்தால் சிவில் நீதிபதிகளை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதில் அக்டோபர் மாதம் 9-ந் தேதிக்குள் தமிழில் விண்ணப்பிக்குமாறு கூறப்பட்டு இருந்ததோடு, தமிழ்மொழி தெரியாதவர்களும் தேர்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதை கண்டித்தும், மோட்டார் வாகன சட்டத்தில் விபத்து இழப்பீடு நிவாரண வழக்கு தொடுப்பவர்களை பாதுகாக்கும் வகையில் விதிகளை உருவாக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் நேற்று ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட இடங்களில் சுமார் ஆயிரம் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் துணைத்தலைவர் வக்கீல் ராமலிங்கம் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசுப்பணி தேர்வு ஆணையத்தால் சிவில் நீதிபதிகளை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் தமிழ்மொழி தெரியாதவர்களும் தேர்வில் பங்கேற்கலாம் என கூறப்பட்டு உள்ளது. அதை கண்டிக்கிறோம். மோட்டார் வாகன சட்டத்தில் விபத்து இழப்பீடு நிவாரண வழக்குகளை முதலில் சமரச மையத்திற்கு கொண்டு சென்று, அங்கு தீர்வு ஏற்படவில்லை என்றால் 6 மாத காலத்திற்குள் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்ற சட்ட திருத்தத்தினையும் எதிர்க்கிறோம்.

பொதுவாக விபத்து இழப்பீடு வழக்குளில் வழக்கு தொடுப்பவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் விதிகளை உருவாக்க வேண்டும். மேலும் விபத்து இழப்பீட்டு நிவாரணத்தினை தவணை முறையில் வழங்குவதை தவிர்க்க வேண்டும். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story