குலக்கல்வியின் மறு வடிவம் தான் தேசிய கல்விக்கொள்கை - முத்தரசன் குற்றச்சாட்டு


குலக்கல்வியின் மறு வடிவம் தான் தேசிய கல்விக்கொள்கை - முத்தரசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 21 Sep 2019 11:15 PM GMT (Updated: 21 Sep 2019 8:33 PM GMT)

குலக்கல்வியின் மறு வடிவம் தான் தேசிய கல்வி கொள்கை என்று முத்தரசன் குற்றஞ்சாட்டினார்.

காரைக்குடி,

காரைக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசு கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் தமிழகத்திற்கும் தமிழக மாணவர்களுக்கும் எதிரான நடவடிக்கை ஆகும். நீட் தேர்வுக்கு தமிழகத்தில் விதிவிலக்கு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதற்காக போராட்டங்களை நடத்தினோம்.

இந்த பிரச்சினையினால் அனிதா உள்ளிட்ட ஏராளமானோரை இழந்துள்ளோம். தேசிய கல்வி கொள்கை பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட, பழங்குடி மாணவர்கள் தொடர்ந்து படிக்க முடியாத ஆபத்தான நிலையாகும். ராஜாஜி முதல்-அமைச்சராக இருந்த போது குலக்கல்வி முறை என்று நேரடியான திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது திராவிட இயக்கங்கள், கம்யூனிஸ்டு கட்சிகள், காமராஜர் உள்ளிட்டோர் அதனை கடுமையாக எதிர்த்தனர். அதனால் ராஜாஜி ராஜினாமா செய்தார்.

ராஜாஜி நேரடியாக குலக்கல்வி என்று அறிவித்தார் ஆனால் மத்திய அரசு நேரடியாக இதை சொல்லாமல் தேசிய கல்வி கொள்கை என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழகத்தில் கருத்து கேட்டதாகவும் கூறி, கருத்து கேட்பு முடிவடைந்ததாகவும் கூறி வருகிறது. ஆனால் எங்கே எப்போது யாரை கருத்து கேட்டார்கள், யார் கேட்டார்கள் என்பது தெரியவில்லை. குலக்கல்வியின் மறு வடிவம் தான் தேசிய கல்வி கொள்கை.

இது சம்பந்தமாக கஸ்தூரிரங்கன் கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்க கூடாது, அதனை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். சுபஸ்ரீ மரணத்தால் பல்வேறு அரசியல் கட்சிகள் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளதை வரவேற்கிறேன். பேனர் வைக்கும் கலாசாரம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. அரசு உரிய கவனம் செலுத்தாத காரணத்தால் படுகொலைகள் தொடர்கதையாகி வருகிறது.

இதனால் கூலிப்படையினர், சமூக விரோதிகள் அதிகரித்து வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த இயலாத நிலையில் இந்த அரசு உள்ளது. அமித்ஷா கூறி வரும் கருத்துகள் அவர் வகிக்கும் பொறுப்பிற்கு அழகல்ல. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைச்செயலாளர் ராமச்சந்திரன், மாநில விவசாய பிரிவு செயலாளர் சாத்தையா ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story