புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள்-ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள்-ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 21 Sep 2019 10:30 PM GMT (Updated: 21 Sep 2019 8:59 PM GMT)

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள்-ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆக்கூர்,

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே விளநகர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி இங்குள்ள ஸ்ரீதேவி, பூதேவியுடன் 12 அடி உயரத்தில் அருள்பாலிக்கும் பெருமாளுக்கு பால், தயிர், மஞ்சள்பொடி, திரவியப்பொடி, பழச்சாறு, பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. இதையடுத்து மேள-தாளத்துடன் வேதமந்திரங்கள் முழங்க மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்து ஏராளமான பக்தர்கள் ‘நாராயணா, நாராயணா‘ என்று சரணகோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது.

பெருமாள்-ஆஞ்சநேயர் கோவில்கள்

இதேபோல் ஆக்கூர் ஆதிநாராயண பெருமாள் கோவில், நடராஜப்பிள்ளை சாவடி ஆனந்த கோவிந்தராஜ பெருமாள் கோவில், தலச்சங்காடு நான்மதியப்பெருமாள் கோவில், மேலப்பெரும்பள்ளம், கருவாழக்கரை, மேலக்கட்டளை ஆகிய ஊர்களில் உள்ள லெட்சுமி நாராயண பெருமாள் கோவில், திருநகரி, பொன்செய் கிராமம், கஞ்சாநகரம் ஆகிய ஊர்களில் உள்ள பால ஆஞ்சநேயர் கோவில், மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோவில் ஆகிய கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு மலர் மாலை, துளசி மாலை அணிவித்தும், ஆஞ்சநேயருக்கு வடை மாலை, வெற்றிலை மாலை உள்ளிட்ட மாலைகள் அணிவித்தும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story