கோவையில், ஓய்வுபெற்ற என்ஜினீயரிடம் ரூ.40 லட்சத்தை திருடிய கார் டிரைவர், நண்பருடன் கைது
காதலி துப்பு கொடுத்ததால் ஓய்வுபெற்ற என்ஜினீயரிடம் ரூ.40 லட்சத்தை திருடிய கார் டிரைவர், நண்பருடன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
கோவை சிங்காநல்லூர் அருகே நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 62). இவர் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் இணை முதன்மை என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த கிஷோர் (26) என்பவர் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார்.
இந்தநிலையில் பழனிசாமி தனது மகன் பெயரில் பொள்ளாச்சி அருகே மலை யாண்டிபட்டிணத்தில் உள்ள 4 ஏக்கர் தோட்டத்தை விற்பதற்காக கடந்த 4-ந் தேதி காரில் மகனுடன் சென்றார். காரை டிரைவர் கிஷோர் ஓட்டிச் சென்றார். அங்கு அவர், பெண் ஒருவருக்கு தோட்டத்தை விற்று விட்டு ரூ.40 லட்சத்தை வாங்கிக்கொண்டு காரில் வீட்டுக்கு புறப்பட்டார்.
இரவு 8 மணிக்கு வரும் வழியில் பழனிசாமியின் மகன் பல்லடத்தில் இறங்கினார். அதன்பிறகு பழனிசாமி டிரைவர் கிஷோருடன் வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டுக்கு வந்ததும் காரை விட்டு இறங்கிய பழனிசாமி பணப்பையை எடுத்து வருமாறு டிரைவர் கிஷோரிடம் கூறிவிட்டு கேட் கதவை திறந்து கொண்டு இருந்தார்.
அப்போது டிரைவர் கிஷோர் பணப்பையுடன் காரை திருப்பிக்கொண்டு தப்பிச் சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பழனிசாமி, கிஷோரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து பழனிசாமி கொடுத்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணப்பையை திருடிக்கொண்டு காரில் தப்பிச் சென்ற டிரைவர் கிஷோரை தேடினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் டிரைவர் கிஷோர் தனது நண்பரான ஈரோட்டை சேர்ந்த கலைச்செல்வன்(29) என்பவருடன் ரூ.40 லட்சத்தை எடுத்துக் கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு காரிலேயே தப்பிச்சென்றதும், கிஷோருக்கு ஒரு காதலி இருப்பதும் தெரிய வந்தது.
உடனே சிங்காநல்லூர் போலீசார் கிஷோரின் காதலியை தொடர்பு கொண்டு, அவர் பயன்படுத்தும் மற்றொரு செல்போன் எண்ணை பெற்றனர். அதை துப்பாக வைத்துக் கொண்டு கிஷோர் இருக்கும் இடத்தை போலீசார் கண்டறிய முயன்றனர். அப்போது அவர்கள் 2 பேரும் ஈரோடு கருங்கல்பாளையத்தில் இருப்பதாக செல்போன் டவர் காட்டியது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் பாலகுமாரன், வைத்திய நாதன் உள்ளிட்ட போலீசார் கருங்கல்பாளையத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு காந்திசிலை அருகே சுற்றித்திரிந்த கிஷோர் மற்றும் அவருடைய நண்பர் கலைச்செல்வன் ஆகிய 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.35 லட்சம் மற்றும் காரை போலீசார் மீட்டனர். .
டிரைவர் கிஷோர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் உல்லாச வாழ்க்கை வாழ திட்டமிட்டேன். அப்போதுதான் பழனிசாமி தோட்டத்தை விற்ற பணத்துடன் என்னுடன் வந்தார். உடனே பணத்தை திருட இது சரியான நேரம் என்று கருதி பணத்தை திருடிக்கொண்டு காருடன் தப்பினேன். பின்னர் எனது நண்பர் கலைச்செல்வனை காரில் ஏற்றிக் கொண்டு பெங்களூருவுக்கு சென்றேன்.
போலீசார் பிடித்து விடக்கூடாது என்பதற்காக காரின் பதிவு எண்ணை மாற்றினேன். கடந்த 15 நாட்களாக நாங்கள் பெங்களூரு, மைசூரு, புதுச்சேரி, ஒகேனக்கல், மொடக்குறிச்சி ஆகிய பகுதிகளில் ஜாலியாக சுற்றி பணத்தை செலவு செய்தோம். பெண்களிடம் உல்லாசமாக இருந்தோம். விலை உயர்ந்த மதுபான பாட்டில்களை வாங்கி குடித்தோம்.
மேலும் என்து காதலிக்கும் பணத்தை செலவழித்தேன். திருடிய பணத்தில் ரூ.5 லட்சத்தை செலவு செய்தோம். போலீசார் எளிதில் பிடித்து விடுவார்கள் என்பதால் எங்கேயும் அறை எடுத்து தங்கவில்லை. ஆனால் எனது மற்றொரு செல்போன் எண்ணை போலீசார் எனது காதலியிடம் வாங்கி உள்ளனர். அதை வைத்து விசாரணை நடத்தி கருங்கல்பாளையத்தில் எங்களை கைது செய்தனர்.
இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.
கைது செய்யப்பட்ட கிஷோர் மீது ஏற்கனவே கோபி, சேவூர், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கைதான கிஷோர், அவருடைய நண்பர் கலைச்செல்வன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story