கூடலூரில், காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி
கூடலூரில் காட்டு யானை தாக்கி மூதாட்டி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக ஊருக்குள் வருகின்றன. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். கூடலூர் கோக்கால், கெவிப்பாரா, தொரப்பள்ளி, ஸ்ரீமதுரை, நாடுகாணி, ஓவேலி உள்ளிட்ட இடங்களில் காட்டு யானைகள் பல மாதங்களாக முகாமிட்டு வருகின்றன. காட்டுயானைகள் இரவு நேரங்களில் தோட்டங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்தியும், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தியும் வருகிறது.
சில சமயங்களில் பொதுமக்களையும் தாக்குகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கூடலூர் சளிவயல் அருகே மில்லிக்குன்னு பகுதியில் நேற்று முன்தினம் பகலில் காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டன. இதனால் பொதுமக்கள் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்துக்கு பிறகு யானைகள் அங்கிருந்து சென்றது.
இதே சமயத்தில் மில்லிக்குன்னு குரும்பர்பாடி ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த காளி (வயது 65) என்ற மூதாட்டி ஆடுகள் மேய்க்க வனத்துக்குள் சென்றார். ஆனால் மாலையில் அவர் வீடு திரும்ப வில்லை. இதையடுத்து ஆதிவாசி மக்கள் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்க வில்லை. இந்த நிலையில் மில்லிக்குன்னு வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி உடல் சிதைந்த நிலையில் மூதாட்டி காளி பலியாகி கிடப்பதை அப்பகுதி மக்கள் நேற்று மாலை 3 மணிக்கு கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கூடலூர் போலீசார் மற்றும் ஓவேலி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது உடல் சிதைந்த நிலையில் மூதாட்டி காளி இறந்து கிடந்தார். பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காட்டு யானைகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story