ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் கருணாநிதி சிலை - மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் கருணாநிதி சிலை - மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 23 Sept 2019 4:45 AM IST (Updated: 23 Sept 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஈரோடு, 

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகள் உள்ளன. இங்கு சமீபத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிலை அமைக்கப்பட்டு திறப்பு விழா காணப்படாமல் உள்ளது. இந்தநிலையில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கலைஞர் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன், எ.வ.வேலு, என்.கே.கே.பி.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி வரவேற்றார். விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். முன்னதாக காரில் பன்னீர்செல்வம் பூங்கா பகுதிக்கு வந்த அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிலை மேடையின் முன்னால் அமைக்கப்பட்டு இருந்த சிறு தளத்தில் நின்று கொண்டு அவர் செல்போன் ரிமோட் மூலம் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். ரிமோட்டை அழுத்தியதும், சிலையில் மீது வைக்கப்பட்டு இருந்த திரை மேலாக எழுந்தது. சிலை வெளியே தெரிந்தபோது கூட இருந்த தொண்டர்கள் கருணாநிதி புகழ் கோஷம் எழுப்பினார்கள்.

ரிமோட்டை கையில் வைத்திருந்த மு.க.ஸ்டாலின், திரை முழுவதும் விலகும் வரை பார்வையை எங்கும் செலுத்தாமல் நெகிழ்ச்சியுடன் சிலையையே பார்த்துக்கொண்டு நின்றார். சிரித்த முகத்தில் கருப்பு கண்ணாடியுடன் தங்க நிறத்தில் மின்னிய சிலையைப்பார்த்து அனைவரும் கைகளைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பின்னர் இன்னொரு ரிமோட்டை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இயக்க, சிலையின் மேல் பகுதியில் இருந்து ரோஜா இதழ்கள் சிலையின் மீது சொரிந்தது.

சிலை திறப்பு விழாவையொட்டி சிலையின் அடிப்பகுதியில் அமைந்து உள்ள வெற்றி நூலகத்துக்கு புத்தகங்களையும், பன்னீர் செல்வம் பூங்காவையொட்டி சாலையோர கடைகள் நடத்தும் 8 பெண்கள் மற்றும் 2 செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு உட்கார இருக்கை மற்றும் நிழலுக்கான குடைகளை அவர் வழங்கினார். பின்னர் நூலகத்தை பார்வையிட்ட அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவரைப்பார்த்து தொண்டர்கள் குரல் கொடுத்தபோதெல்லாம், மு.க.ஸ்டாலினும் கைகளை உயர்த்தி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். காரில் ஏறும்போதும் காரில் சில வினாடிகள் நின்று சுற்றிலும் நின்ற தொண்டர்களை பார்த்து கைகளை அசைத்தும், புன்னகைத்தும் விடைபெற்றார்.

விழாவில் தி.மு.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம், வி.சி.சந்திரகுமார், குமார் முருகேஸ், என்.நல்லசிவம், இல.பத்மநாபன், ஆ.செந்தில்குமார், செல்லப்பொன்னி மனோகரன், சின்னையன், பி.கே.பழனிச்சாமி, கே.ஈ.பிரகாஷ், கந்தசாமி (முன்னாள் எம்.பி.), முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், மாதையன் மற்றும் குறிஞ்சி சிவக்குமார், பொ.ராமு என்கிற ராமச்சந்திரன், து.சந்திரசேகர், மதன்மோகன், பவானி ரங்கசாமி, அக்னி சந்துரு, வி.சி.நடராஜன், தண்டபாணி, கேபிள் செந்தில்குமார், கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஈ.பி.ரவி, மக்கள் ஜி.ராஜன், நா.விநாயகமூர்த்தி, கொங்கு கோவிந்தராஜன், மாரிமுத்து, திராவிட இயக்க தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் தமிழ்க்குமரன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மதியம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஈரோடு வந்தார். அவருக்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் கால்களை இழந்த தி.மு.க. தொண்டர் ஒருவருக்கு 3 சக்கர ஸ்கூட்டரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அவர் சென்ற அனைத்து பகுதிகளிலும் கட்சி தொண்டர்கள், கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Next Story