உவரி அருகே, லாரி-கார் மோதல்; சுற்றுலா பயணிகள் 9 பேர் காயம்


உவரி அருகே, லாரி-கார் மோதல்; சுற்றுலா பயணிகள் 9 பேர் காயம்
x
தினத்தந்தி 22 Sep 2019 10:00 PM GMT (Updated: 22 Sep 2019 8:30 PM GMT)

உவரி அருகே லாரி, கார் மோதிக்கொண்ட விபத்தில் சுற்றுலா பயணிகள் 9 பேர் காயம் அடைந்தனர்.

திசையன்விளை, 

தர்மபுரியை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ், மேகராஜ் (வயது 22), பரமசிவம் (32), ஷாஜகான் உள்ளிட்ட 9 பேர் ஒரு காரில் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அதே காரில் 9 பேரும் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரிக்கு புறப்பட்டனர். காரை கோவிந்தராஜ் ஓட்டினார்.

உவரி அருகே நவ்வலடி பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த லாரியும், கோவிந்தராஜ் ஓட்டிவந்த காரும் எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதிக் கொண்டன.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த கோவிந்தராஜ், மேகராஜ், பரமசிவம், ஷாஜகான் உள்ளிட்ட 7 பேர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்து அபயக்குரல் எழுப்பினர். 2 பேர் லேசான காயமடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். காயமடைந்த 9 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story