நாகர்கோவிலில் பட்டப்பகலில் துணிகரம் போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் 6½ பவுன் நகை கொள்ளை


நாகர்கோவிலில் பட்டப்பகலில் துணிகரம் போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் 6½ பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 23 Sep 2019 10:00 PM GMT (Updated: 23 Sep 2019 2:45 PM GMT)

நாகர்கோவிலில் பட்டப்பகலில் போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் 6½ பவுன் நகையை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி டிஸ்லரி ரோட்டை சேர்ந்தவர் அய்யம்பெருமாள். இவருடைய மனைவி கஸ்தூரி (வயது 75). இவர் தினமும் அருகே உள்ள கோவிலுக்கு செல்வது வழக்கம். இதே போல் நேற்று முன்தினமும் கோவிலுக்கு சென்றார். சாமி கும்பிட்டு விட்டு சிறிது நேரம் கழித்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென கஸ்தூரியை தடுத்து நிறுத்தி தங்களை போலீஸ் என்று அறிமுகம் செய்துகொண்டனர்.

மேலும், “இந்த பகுதியில் திருடர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. நீங்கள் இப்படி நகை அணிந்து கொண்டு செல்வது ஆபத்து. எனவே நீங்கள் அணிந்திருக்கும் நகையை கழற்றி எங்களிடம் தாருங்கள். அதை நாங்கள் பேப்பரில் பத்திரமாக பொதிந்து தருகிறோம்“ என்றனர்.

நகை கொள்ளை

இதை நம்பிய கஸ்தூரி தான் அணிந்திருந்த 6½ பவுன் நகையை கழற்றி அவர்களிடம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அந்த நகையை 2 பேரும் சேர்ந்து பேப்பரில் பொதிந்து கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். வீட்டுக்கு வந்ததும் கஸ்தூரி பேப்பரை பிரித்து பார்த்தபோது அதில் நகை இல்லை. போலீஸ் போல் நடித்து நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. இதனால் கஸ்தூரி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுபற்றி வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் மர்ம நபர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை.

வலைவீச்சு

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story