பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை- வீட்டுமனை வழங்க கோரிக்கை


பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை- வீட்டுமனை வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 23 Sep 2019 11:00 PM GMT (Updated: 23 Sep 2019 7:00 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் குடும்பத்தினரில் ஒருவருக்கு வேலை- வீட்டுமனை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக நிலம் அளித்த விவசாயிகளுக்கு வேலை மற்றும் வீட்டுமனை அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருமாந்துறை, பெண்ணக்கோணம், எறையூர், சின்னாறு, அயன்பேறையூர், பெருமத்தூர், பெருமத்தூர் நல்லூர், லப்பைகுடிக்காடு, மிளகாநத்தம், டி.கீரனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விவசாயிகளை ஒவ்வொரு குழுவாக சென்று கலெக்டரிடம் மனு அளிக்குமாறு கூறினர். அப்போது விவசாயிகள் நாங்கள் தனித்தனியாக மனு எழுதி கொண்டு வந்துள்ளோம். அதனால் நாங்கள் தனித்தனியாக தான் சென்று கலெக்டரிடம் மனு கொடுப்போம் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தனித்தனியாக மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்கு ஓடினர். கலெக்டர் சாந்தாவிடம் இது தொடர்பாக தனித்தனியாக வந்து விவசாயிகள் மனு கொடுத்ததால், கலெக்டர் சாந்தா சம்பந்தப்பட்ட தாசில்தார்களை அழைத்து மனுக்களை மொத்தமாக பெற்று வருமாறு உத்தரவிட்டார். அதன்பேரில் தாசில்தார்களும் சென்று விவசாயிகளிடம் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்

அந்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக கடந்த 2007-ம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனம், இந்திய அரசின் பெருவணிக துறை மற்றும் அன்றைய தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து பணம் கொடுத்து விவசாயிகளிடம் இருந்து 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தினர். மேலும் வீட்டில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு மற்றும் வீட்டுமனை வழங்குவதாக ஆசை வார்த்தைகள் கூறினர். ஆனால் 12 ஆண்டுகளாகியும் இதுவரை திட்டம் தொடங்குவதற்கான எவ்வித அறிகுறியும் தெரியவில்லை. இதனால் நிலம் கொடுத்த விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் இழந்து நிற்கிறார்கள். எனவே அரசு வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு மற்றும் வீட்டுமனை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இல்லையெனில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அடிப்படை வசதிகள்

குரும்பலூர் பொதுமக்கள் சார்பில் இந்திய தொழிலாளர் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் கலெக்டர் சாந்தாவிடம் கொடுத்த மனுவில், குரும்பலூர் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சாலை வசதி, மின்விளக்கு வசதி ஆகியவற்றை நிறைவேற்றி கொடுக்க வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். அரசு கல்லூரி முன்பு பஸ்கள் நின்று செல்ல வேண்டும். குரும்பலூரில் உள்ள ஏரியை குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வார வேண்டும் என்று கூறியிருந்தனர்.

நடவடிக்கை

செஞ்சேரி பொதுமக்கள் கொடுத்த மனுவில், பெரம்பலூர்- துறையூர் சாலையில் செஞ்சேரியில் சாலை விரிவாக்க பணி நடைபெறுவதால், சாலையோரத்தில் உள்ள விநாயகர் கோவிலை செட்டிகுளம் பிரிவு சாலையில் விநாயகர் கோவிலை இடம் மாற்றம் செய்ய அனுமதி வழங்க வேண்டும். செஞ்சேரி கிராமத்தில் உள்ள ராஜீவ்காந்தி சேவா கேந்திரிய மையத்தில் கட்டிட ஒப்பந்ததாரர்கள் தங்களது வேலை ஆட்களை தங்க வைத்து ஆக்கிரமித்துள்ளனர். மேலும் மைதானத்தில் கட்டுமான பொருட்களை வைத்துள்ளனர். எனவே ராஜீவ்காந்தி சேவா கேந்திரிய மையத்தையும், மைதானத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

422 மனுக்கள்

கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 422 மனுக்களை கலெக்டர் சாந்தா பெற்றுக்கொண்டார். தொடர்ந்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 14 நபர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான உத்தரவுகளையும், ஊரக வளர்ச்சித் துறை மூலமாக ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் உத்தரவினையும் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சக்திவேல், மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மஞ்சுளா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story