மகளின் கோரிக்கையை ஏற்று குளத்தை சுத்தம் செய்த பெற்றோர் கிராம மக்கள் பாராட்டு


மகளின் கோரிக்கையை ஏற்று குளத்தை சுத்தம் செய்த பெற்றோர் கிராம மக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 23 Sep 2019 11:00 PM GMT (Updated: 23 Sep 2019 7:17 PM GMT)

திருத்துறைப்பூண்டி அருகே கோபத்தில் பேசாமல் இருந்த மகளை பேச வைக்க அவளுடைய கோரிக்கையை ஏற்று பெற்றோர். குளத்தை சுத்தம் செய்தனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்திற்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மருதவனம் காலனி தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு அருள்மொழி என்ற மனைவியும், பத்தாம் வகுப்பு படிக்கும் விவேகானந்தன் என்ற மகனும், ஏழாம் வகுப்பு படிக்கும் நதியா என்ற மகளும் உள்ளனர். இருவரும் மருதவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில் சிவக்குமார் வீடு இடிந்தது. அதன் பிறகு சிவக்குமாருக்கு சரிவர வேலையும் கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்த சிவக்குமார், தன் மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். சிவக்குமார் தம்பதியினர் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வதை பார்த்த குழந்தை நதியா மிகுந்த மனவேதனை அடைந்தாள். தனது தாயிடம், அடிக்கடி தந்தை சண்டை போட்டுக்கொள்ளும் சம்பவம் அந்த பிஞ்சு உள்ளத்தில் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. இதனால் நதியா தனது தந்தையிடம் பேசுவதை நிறுத்தி விட்டாள்.

குளத்தை சுத்தம் செய்யும் பணி

கோபத்தில் இருக்கும் மகள் கோபம் தணிந்து தன்னிடம் எப்படியும் பேசுவாள் என்று சிவக்குமார் முதலில் நினைத்தார். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, ஒரு மாதம் இரண்டு மாதம் அல்ல, கடந்த 8 மாதத்திற்கு மேல் நதியா தனது தந்தையிடம் பேசவே இல்லை. தனது அன்பு மகள் தன்னிடம் பேசாததை நினைத்து மிகவும் மனம் வருந்திய சிவக்குமார், மகள் நதியாவிடம், ஏம்மா... என்னிடம் பேச மறுக்கிறாய். ‘நீ என்னிடம் பேச வேண்டுமானால் நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டுள்ளார்.

அதற்கு சிறுமி நதியா, ‘இனிமேல் அம்மாவிடம் சண்டை போடக்கூடாது. மேலும் நான் படிக்கும் பள்ளிக்கூடம் அருகில் உள்ள கருங்குளத்தில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அந்த குப்பைகளை அகற்றி குளத்தை சுத்தம் செய்ய வேண்டும்’. அப்போதுதான் நான் உங்களிடம் பேசுவேன்’ என்று கூறியுள்ளார்.

தனது மகளை பேச வைப்பதற்காக சிவக்குமார் உடனடியாக களத்தில் இறங்கினார். இதனையடுத்து தனது மனைவி அருள்மொழியுடன் இணைந்து கருங்குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். தம்பதியினர் இருவரும் சேர்ந்து அந்த குளத்தில் இருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

கிராம மக்கள் பாராட்டு

கோபத்தில் பேசாமல் இருந்த மகளை பேச வைக்க குளத்தை பெற்றோர் சுத்தம் செய்த சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக கிராம மக்கள் அந்த தம்பதியினரை பாராட்டினர்.

Next Story