திண்டிவனம் தங்கும் விடுதியில், ஏ.சி. மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை


திண்டிவனம் தங்கும் விடுதியில், ஏ.சி. மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 23 Sep 2019 10:00 PM GMT (Updated: 23 Sep 2019 7:26 PM GMT)

திண்டிவனம் தங்கும் விடுதியில் ஏ.சி. மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கவரை கிராமத்தை சேர்ந்தவர் விஜயபாஸ்கர்(வயது 40). ஏ.சி.மெக் கானிக். இவருக்கு ஷகீலா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் விஜயபாஸ்கருக்கு புதுச்சேரியை சேர்ந்த கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் வாழும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் புதுச்சேரி பெண் மற்றும் அவரது குழந்தைகளை கவரை கிராமத்துக்கு அழைத்து வந்து, குடும்பம் நடத்தி வந்தார். இந்த சம்பவம் பற்றி அறிந்த ஷகீலாவுக்கும், அவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த ஷகீலா, தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு அதேஊரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் விஜயபாஸ்கர் கடந்த 19-ந்தேதி இரவு திண்டிவனம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். நேற்று மதியம் வரை அறையின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் ஜன்னலை திறந்து பார்த்தபோது, அவர் மின்விசிறியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து விடுதி ஊழியர்கள் இந்த சம்பவம் பற்றி திண்டிவனம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விஜயபாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட விஜயபாஸ்கர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் 4 பேர் கொண்ட கும்பலின் பெயரை எழுதி, அவர்கள் தன்னை ஒரு நாள் முழுவதும் அடித்து துன்புறுத்தினர் என குறிப்பிட்டிருந்தார்.

அதன்அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், விஜயபாஸ்கர் குடும்ப செலவுக்காக பலபேரிடம் கடன் வாங்கி இருந்துள்ளார். அந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்காததால் பாதிக்கப்பட்ட நபர்கள் யாரேனும் அவரை அடித்து துன்புறுத்தியதால், மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story