ஸ்ரீவைகுண்டம் அருகே, 3 விவசாயிகளுக்கு அரிவாள் வெட்டு - ஹெல்மெட் அணிந்து வந்த 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு


ஸ்ரீவைகுண்டம் அருகே, 3 விவசாயிகளுக்கு அரிவாள் வெட்டு - ஹெல்மெட் அணிந்து வந்த 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Sep 2019 10:30 PM GMT (Updated: 23 Sep 2019 11:21 PM GMT)

ஸ்ரீவைகுண்டம் அருகே ஹெல்மெட் அணிந்து வந்த 4 பேர் கும்பல், 3 விவசாயிகளை அரிவாளால் வெட்டியது. அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம், 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ராமானுஜம்புதூரைச் சேர்ந்தவர்கள் சங்கர நாராயணன் (வயது 50), ஆயிரம் (50), பூவலிங்கம் (38). விவசாயிகளான இவர்கள் 3 பேரும் நேற்று இரவில் ராமானுஜம்புதூர் மெயின் ரோடு கிருஷ்ணர் சிலை அருகில் நின்று பேசி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்தவாறு 4 மர்மநபர்கள் கைகளில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் திடீரென்று சங்கர நாராயணன், ஆயிரம், பூவலிங்கம் ஆகிய 3 பேரையும் சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் விவசாயிகளை வெட்டிக் கொல்ல முயன்றதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். உடனே 4 மர்மநபர்களும் ரத்தம் தோய்ந்த ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பி சென்று விட்டனர்.

பலத்த வெட்டுக்காயம் அடைந்த சங்கர நாராயணன், ஆயிரம், பூவலிங்கம் ஆகிய 3 பேரையும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், சேரகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விவசாயிகளை கொல்ல முயன்ற மர்மகும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

விவசாயிகளை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்றவர்கள் யார்? எதற்காக இந்த செயலில் ஈடுபட்டனர் என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story