மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 Sep 2019 10:00 PM GMT (Updated: 24 Sep 2019 10:00 PM GMT)

மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நேற்று மீண்டும் நிரம்பியது. நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதன் எதிரொலியாக கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் இந்த அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த மேட்டூருக்கு வந்தது.

கடந்த மாதம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கொண்டே வந்தது. இதன் எதிரொலியாக கடந்த 7-ந் தேதி அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. மேலும் அணையில் இருந்து காவிரி டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணையில் இருந்து பாசன தேவைக்காக திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறையத்தொடங்கியது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 119.95 அடியாக இருந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதே போல காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு முதல் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு 2-வது முறையாக நேற்று காலை மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசன தேவைக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று மதியம் முதல் 16 கண் பாலம் மதகுகள் வழியாக மீண்டும் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

அதே நேரத்தில் கால்வாய் பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்ததன் காரணமாக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 400 கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று இரவு நிலவரப்படி வினாடிக்கு 40ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 37 ஆயிரத்து 900 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

தண்ணீர் வரத்து அதிகரித்தால், நீர்திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 89.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story