சென்னை விமான நிலையத்தில் ரூ.47 லட்சம் தங்கம் பறிமுதல்; வாலிபர் கைது


சென்னை விமான நிலையத்தில் ரூ.47 லட்சம் தங்கம் பறிமுதல்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Sept 2019 4:15 AM IST (Updated: 26 Sept 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் துபாய், மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.47 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒரு வாலிபர் கைதானார். 2 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சாதிக் அலி(வயது 52), நாகப்பட்டினத்தை சேர்ந்த சிராஜுதீன் (48) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் மடிக்கணினிகள் இருந்தன. இருவரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து 2 பேரிடம் இருந்தும், ரூ.27 லட்சம் மதிப்புள்ள 689 கிராம் தங்கமும், ரூ.3 லட்சம் மதிப்புள்ள 56 மடிக்கணினிகளையும் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த திருச்சியை சேர்ந்த அம்ஜத் கான்(30) என்பவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள 508 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் 3 பேரிடம் இருந்து ரூ.47 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 197 கிராம் தங்கமும், ரூ.3 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அம்ஜத்கானை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மற்ற 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story