திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் கோவில் குளத்தில் முதலை பொதுமக்கள் அச்சம்


திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் கோவில் குளத்தில் முதலை பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 25 Sep 2019 10:45 PM GMT (Updated: 25 Sep 2019 7:24 PM GMT)

திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் கோவில் குளத்தில் முதலை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் திருவைகாவூர் கிராமத்தில் உள்ள வில்வவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான எமதீர்த்த குளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஒருவர் முதலையை கண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து ஊர் மக்களிடம் கூறினார். இதனால் மக்கள் அச்சமடைந்து கோவில் குளத்துக்கு செல்லாமல் உள்ளனர். இந்த குளத்தில் ஆண்டுதோறும் சிவராத்திரி அன்று தீர்த்தவாரி நடைபெறும். எனவே ஆண்டுதோறும் குளத்தை தூய்மைப்படுத்துவது வழக்கம். இந்த ஆண்டு இந்த குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்தி வைத்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் குளத்தில் முழுமையாக தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. இந்த குளத்தில் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் ஆடு, மாடுகளை குளிப்பாட்டுவது வழக்கம். மேலும் சிலர் இந்த குளத்தில் குளித்து செல்வார்கள். தற்போது குளத்தில் முதலை நடமாட்டத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

எச்சரிக்கை

குளத்துக்கு முதலை எவ்வாறு வந்தது? என தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சுவாமிநாதன், அறிவானந்தம், வனத்துறை அலுவலர் ரஞ்சிதா, தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார், மற்றும் பணியாளர்கள் அங்கு சென்று குளத்தில் முதலை உள்ளதா? என பார்வையிட்டனர். தற்போது குளத்தில் தண்ணீர் அதிகம் உள்ளதால் முதலையை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறினர். மேலும் குளத்தில் பொதுமக்கள் யாரும் குளிக்க வேண்டாம் என்றும் ஆடுமாடுகளை குளிப்பாட்ட வேண்டாம் என்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு குளக்கரையில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.


Next Story