போலி சான்றிதழ் மூலம் ரூ.2 கோடி மோசடி: முன்னாள் வங்கி மேலாளர் உள்பட 3 பேருக்கு ஜெயில்
போலி சான்றிதழ் மூலம் ரூ.2 கோடி கடன்மோசடி செய்த முன்னாள் வங்கி மேலாளர் உள்பட 3 பேருக்கு தலா ஓராண்டு ஜெயில் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
மும்பை,
மும்பை கோரேகாவ் பகுதியை சேர்ந்தவர் அதுல் சாட்வானி. இவரது மனைவி சோபனா. இவர்கள் கடந்த 2006-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து பெட்ஷீட்கள், டவல்கள் உள்பட பல பொருட்கள் இறக்குமதி செய்ய இருப்பதாக கோரேகாவில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி கிளையில் ரூ.2 கோடி கடன்கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து அந்த வங்கியின் மேலாளர் மகாவீர் பண்டாரி அவர்களுக்கு ரூ.2 கோடிக்கு கடன் ஒப்புதல் வழங்கி உள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து வங்கி மேலாளர் சில மாதங்களில் பணிஓய்வு பெற்று விட்டார்.
இந்தநிலையில் வங்கி கடன் தொடர்பாக அதிகாரிகள் ஆவணங்களை சாிபார்த்த போது, அதுல் சட்வானி, சோபனா ஆகியோர் போலி ஆவணங்கள் செலுத்தி இருந்தது தெரியவந்தது. மேலும் இந்த மோசடிக்கு வங்கி மேலாளர் மகாவீர் பண்டாரியும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இதுபற்றி வங்கி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி முன்னாள் வங்கி மேலாளர் மகாவீர் பண்டாரி மற்றும் அதுல் சட்வானி, சோபனா ஆகிய 3 பேரையும் கைது செய்து மும்பை சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நிறைவில் அவர்கள் மீதான குற்றம் நிரூபணமானது. இதையடுத்து தீர்ப்பு கூறிய நீதிபதி 3 பேருக்கும் தலா ஓராண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Related Tags :
Next Story