தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் மனு: இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்க வக்கீல் வலியுறுத்தல் - சுப்ரீம் கோர்ட்டில் இன்றும் விசாரணை நடக்கிறது


தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் மனு: இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்க வக்கீல் வலியுறுத்தல் - சுப்ரீம் கோர்ட்டில் இன்றும் விசாரணை நடக்கிறது
x
தினத்தந்தி 25 Sep 2019 10:58 PM GMT (Updated: 25 Sep 2019 10:58 PM GMT)

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் மனு விசாரணையின்போது, இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட அனுமதி வழங்க வேண்டும் என்று வக்கீல் வாதிட்டார். சுப்ரீம் கோர்ட்டில் இன்றும் (வியாழக்கிழமை) விசாரணை நடக்கிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடைபெற்றது. அவர் 14 மாதங்கள் ஆட்சி நடத்தினார். இந்த நிலையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து கூட்டணி கட்சிகள் பிறப்பித்த கொறடா உத்தரவை மீறியதாக கூறி 17 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அவர்கள் 2023-ம் ஆண்டு வரை சபை உறுப்பினராக முடியாது என்று உத்தரவில் கூறப்பட்டது.

சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து 17 எம்.எல்.ஏ.க்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு கடந்த 23-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோட்டகி ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில் முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, குமாரசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், சபாநாயகர் அலுவலகம் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்பியது. விசாரணை 25-ந் தேதிக்கு (நேற்று) ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோட்டகி ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

15 எம்.எல்.ஏ.க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தனர். ஆனால் அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார். இப்போது 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மனு தாக்கல் செய்ய வருகிற 30-ந் தேதி கடைசி நாள். அவர்கள் ராஜினாமா செய்து 8 வாரங்கள் ஆகின்றன. அதனால் இந்த மனு மீது விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும். இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டு விலக்கு அளித்ததை அடுத்து தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதனால் இது கொறடா உத்தரவை மீறியது ஆகாது. சபாநாயகர் நோட்டீசு வழங்காமல் தகுதி நீக்கம் செய்துள்ளார். 7 நாட்கள் காலஅவகாசம் வழங்கி அவர்களின் விளக்கத்தை கேட்டிருக்க வேண்டும். ராஜினாமா கடிதம் மீது முதலில் முடிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

2023-ம் ஆண்டு வரை சபை உறுப்பினராக சபாநாயகர் தடை விதித்துள்ளார். அதனால் தான் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நான் கேட்கிறேன். தகுதி நீக்க மனு மீது விசாரணை நடைபெற்று வரும்போது, இடைத்தேர்தல் நடத்துவது சரியல்ல. தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்கு தனி விமானத்தில் சென்றது, அங்கிருந்து பெங்களூரு வந்தது பற்றி சபாநாயகர் கேட்பது சரியல்ல. அதற்கும், ராஜினாமாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. தங்களின் ராஜினாமா குறித்து தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் கவர்னருக்கும் தகவல் தெரிவித்தனர். இவ்வாறு முகுல் ரோட்டகி கூறினார்.

கர்நாடக சட்டசபை சபாநாயகர் அலுவலகம் சார்பில் வக்கீல் துஷார்மேத்தா ஆஜராகி வாதிட்டார். எம்.எல்.ஏ.க்கள் சுதாகர், ஸ்ரீமந்த்பட்டீல், ஆர்.சங்கர் ஆகியோர் சார்பில் ஆஜரான வக்கீல்களும் தனித்தனியாக தங்களின் வாதத்தை எடுத்து வைத்தனர். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் ஆஜரான வக்கீல், தேவதத்தா காமத், நாளை (இன்று) தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைப்பதாக கூறினார்.

இதையடுத்து தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் மனு மீதான விசாரணை இன்றைக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். சுப்ரீம் கோர்ட்டில் இன்றும் விசாரணை நடக்கிறது. இடைத்தேர்தலில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் போட்டியிட அனுமதி வழங்குவது தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story