தஞ்சை-திருச்சி இடையே 110 கி.மீ. வேகத்தில் மின்சார ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் பயண நேரம் 27 நிமிடங்கள்


தஞ்சை-திருச்சி இடையே 110 கி.மீ. வேகத்தில் மின்சார ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் பயண நேரம் 27 நிமிடங்கள்
x
தினத்தந்தி 26 Sep 2019 11:00 PM GMT (Updated: 26 Sep 2019 7:05 PM GMT)

தஞ்சை-திருச்சி இடையே 110 கி.மீ. வேகத்தில் மின்சார ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இது பயன்பாட்டிற்கு வந்தால் தஞ்சையில் இருந்து திருச்சிக்கு 27 நிமிடத்தில் செல்லலாம்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் இருந்தும், தஞ்சை வழியாகவும் 23-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்னை, கோவை, திருச்செந்தூர், எர்ணாகுளம், கோவை, திருப்பதி, ராமேஸ்வரம், புதுச்சேரி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர 15-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை-திருச்சி இடையே ஒரு வழிபாதை இருந்தபோது ரெயில்களின் பயண நேரம் அதிகரித்ததுடன், ஒரு ரெயில் செல்லும்போது மற்றொரு ரெயில் இடையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ரெயில்களின் பயண நேரத்தை குறைப்பதற்காகவும், விரைவாக சென்று வருவதற்கு வசதியாகவும் தஞ்சை-திருச்சி பொன்மலை இடையே 49 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவழி பாதை அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் ரெயில்கள் ஒரு வழிபாதையிலும், திருச்சியில் இருந்து தஞ்சைக்கு வரும் ரெயில்கள் மற்றொரு வழிபாதையிலும் இயக்கப்பட்டு வருகிறது.

திருச்சி-தஞ்சை இடையே நடைபெற்று வரும் இரட்டை ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்ததும், தஞ்சை முதல் விழுப்புரம் வரையிலான 228 கி.மீ. ரெயில் பாதை(மெயின் லைன்) ரூ.218 கோடியில் மின்மயமாக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக திருச்சி-தஞ்சை- காரைக்கால்- நாகை-வேளாங்கண்ணி இடையிலான 156 கி. மீ. தொலைவுள்ள ரெயில் பாதையை மின்மயமாக்குவதற்கான பணிகள் தொடங்கின.

இந்த திட்டத்திற்காக ரெயில்வே அமைச்சகம் ரூ.227.26 கோடி ஒதுக்கியது. இதையடுத்து தஞ்சையில் இருந்து காரைக்கால் வரை செல்லும் ரெயில் பாதையின் இரண்டு பக்கங்களிலும் மின்சார கம்பங்கள் நிறுத்த கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டன. இதற்காக துணை மின் நிலையம் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் தஞ்சை-திருச்சி இடையே பணிகள் நிறைவடைந்துள்ளது.

தற்போது தஞ்சை-திருச்சி வழித்தடத்தில் 95 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டு வருகின்றன. அதாவது தஞ்சையில் இருந்து திருச்சி இடையே ரெயில் எந்த நிலையத்திலும் நிற்காமல் சென்றால் 30 நிமிடத்தில் செல்லும். இந்த நிலையில் ரெயிலின் வேகத்தை அதிகரிக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்காக அதிவேக சிறப்பு ரெயில் சோதனை ஓட்டம் தஞ்சை-திருச்சி இடையே நேற்று நடந்தது. தஞ்சையில் இருந்து திருச்சிக்கு மதியம் 12.20 மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. தென்னக ரெயில்வே தலைமை பொறியாளர் ரவிக்குமார் தலைமையில் அதிகாரிகள் ரெயிலை இயக்கி சோதனை செய்தனர். 3 பெட்டிகள் கொண்ட இந்த ரெயில், மின்சார ரெயில் சேவை வழித்தடத்தில் இயக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “தஞ்சை-திருச்சி இடையே 110 கி.மீ. சோதனை முறையில் ரெயில் இயக்குவதையடுத்து பொதுமக்கள், ரெயில் உபயோகிப்பாளர்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சி செய்ய வேண்டாம். ரெயில்வே கேட் பகுதிகளை கடக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 110 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கும்போது எந்த வழித்தடத்திலும் நிற்காமல் சென்றால் 27 நிமிடத்தில் செல்லலாம்” என்றார்.

Next Story