மதுரையில் இருந்து கேரளாவுக்கு கடத்திய 15½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் - லாரி டிரைவர் கைது


மதுரையில் இருந்து கேரளாவுக்கு கடத்திய 15½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் - லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 27 Sept 2019 4:00 AM IST (Updated: 27 Sept 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் இருந்து கேரளாவுக்கு கடத்திய 15½ டன் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரி டிரைவரை கைது செய்தனர். இந்த கடத்தல் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொள்ளாச்சி,

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. இந்த அரிசியை கடத்தல்காரர்கள் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். பின்னர் அதை புதுப்பித்து கேரளாவுக்கு கொண்டு சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை அருகே தமிழக-கேரள எல்லையான வளந்தாயமரம் சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்துவதாக பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலையடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபி, விவேக், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன், தலைமை காவலர் சுரேஷ்பாபு ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனை செய்தனர். அப்போது லாரியில் பொன்னி அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

ஆனால் லாரியில் இருந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் லாரியில் இருந்த சில பொன்னி அரிசி மூட்டைகளை அகற்றி பார்த்த போது, உள்ளே ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த அபுபக்கர் என்பவரது மகன் ஷியாஸ் அலி (வயது 28) என்பதும் தெரியவந்தது.

மதுரையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி மூட்டைகளை கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால் யார்? அரிசி மூட்டைகளை அனுப்பி வைத்தார்கள்? என்பது குறித்த விவரம் தெரியவில்லை.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷியாஸ் அலியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் லாரியில் இருந்த 15½ டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:- பொள்ளாச்சி, கோவை வழியாக கேரளாவுக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் வளந்தாயமரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, ஒரு லாரி வந்தது. போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட கூடாது என்பதற்காக ரேஷன் அரிசி மூட்டைகளுக்கு மேல் பொன்னி அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தனர். பின்னர் லாரியில் தீவிர சோதனை மேற்கொண்ட போது ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.

லாரியில் 30 மூட்டை பொன்னி அரிசியும், 310 மூட்டை ரேஷன் அரிசியும் சேர்த்து 17 டன் அரிசி மூட்டைகள் இருந்தன. இதில் 15½ டன் ரேஷன் அரிசி இருந்தது. தற்போது லாரி டிரைவர் ஷியாஸ் அலி என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியதில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றோம். இந்த வழக்கில் மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story