சாலைகளை சீரமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நாற்று நடும் போராட்டம் 18 பேர் கைது


சாலைகளை சீரமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நாற்று நடும் போராட்டம் 18 பேர் கைது
x
தினத்தந்தி 28 Sep 2019 11:00 PM GMT (Updated: 28 Sep 2019 2:56 PM GMT)

சாலைகளை சீரமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாற்று நடும் போராட்டம் நடந்தது. இதையொட்டி 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் மாநகரில் பாதாள சாக்கடை  பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்காததால், இந்த சாலைகள் மழையின் காரணமாக சகதியாக காட்சி அளிக்கின்றன. அதோடு போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் இருந்து வருகிறது. பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட அவ்வை சண்முகம் சாலையையும் இதுவரை சீரமைக்கவில்லை. இதனால் கட்டபொம்மன் சந்திப்பு பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த சாலைகளை சீரமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கட்டபொம்மன் சந்திப்பில் நாற்று நடும் போராட்டம் நேற்று நடந்தது. இதற்கு நாகர்கோவில் நகர செயலாளர் ஸ்ரீகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து சாலையில் பள்ளமாக கிடந்த பகுதியில் நாற்றுகளை நட்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தை மாவட்ட பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ் முடித்து வைத்தார்.

இதில் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.இசக்கிமுத்து, நிர்வாகிகள் சுப்பிரமணி, கங்கா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

18 பேர் கைது

இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீகுமார் உள்பட 18 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்று, அடைத்து வைத்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி பெற்றுவிட்டு, நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர்  கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story