பூண்டி மாதா பேராலயத்தில் தங்க முலாம் பூசப்பட்ட கிரீடம்- 7½ பவுன் நகைகள் கொள்ளை


பூண்டி மாதா பேராலயத்தில் தங்க முலாம் பூசப்பட்ட கிரீடம்- 7½ பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 29 Sept 2019 4:45 AM IST (Updated: 28 Sept 2019 10:46 PM IST)
t-max-icont-min-icon

பூண்டி மாதாபேராலயத்தில் தங்க முலாம் பூசப்பட்ட கிரீடம் மற்றும் 7½ பவுன் நகைகளை கொள்ளை யடித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டியில் பிரசித்தி பெற்ற மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்துக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த பேராலயத்தில் உள்ள மாதா சொரூபம் பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் இருந்து கொண்டு வரப்பட்டது ஆகும். இங்கு தினமும் காலை பகல் மற்றும் மாலை நேரத்தில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு இங்கு வழிபாடுகளுக்கு பின்னர் ஆலயத்தின் கதவுகள் பூட்டப்பட்டன. நேற்று காலை வழக்கம்போல ஆலயத்தின் ஊழியர்கள் ஆலயத்தின் கதவுகளை திறந்தனர்.

கிரீடம்-நகைகள்கொள்ளை

அப்போது மாதா சொரூபத்தின் தலை மீது வைக்கப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட கிரீடம் மற்றும் மாதாவுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த 4 பவுன் எடையுள்ள நெக்லெஸ் மற்றும் 3½ பவுன் ஜெபமாலை ஆகியவை கொள்ளைபோய் இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இது குறித்து பேராலய அதிபர் பாக்கியசாமிக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் பேராலய அதிபர் ஆலயத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். மேலும் இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் ஆலயத்துக்கு வந்து பார்வையிட்டு திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தினர்.

கண்காணிப்பு கேமரா

மேலும் கோவிலில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராவையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கண்காணிப்பு கேமராவில் முகத்தை துணியால் மூடிய மர்ம நபர் ஒருவர் ஆலயத்தின் உள்ளே புகுந்து கண்காணிப்பு கேமராக்களை திருப்பி வைப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. ஆனால் அந்த நபர் யார்? அவர் எப்படி ஆலயத்துக்குள் புகுந்தார்? என தெரியவில்லை.

சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை நகைகள் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட கிரீடத்தின் மதிப்பு ரூ. 3 லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகைகள் மற்றும் கிரீடத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள முக்கிய கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயமான பூண்டி மாதா பேராலயத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

Next Story