தொழில் போட்டியால் தந்தையை மகனே அடித்துக்கொன்ற கொடூரம் மனைவி உள்பட 3 பேர் கைது


தொழில் போட்டியால் தந்தையை மகனே அடித்துக்கொன்ற கொடூரம் மனைவி உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 28 Sep 2019 11:15 PM GMT (Updated: 2019-09-29T00:00:42+05:30)

பொறையாறு அருகே முகம் சிதைந்த நிலையில் மேடை அலங்கார தொழிலாளி பிணமாக கிடந்த வழக்கில், தொழில் போட்டியால் தந்தையை மகனே அடித்துக் கொன்றது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது. இதுகுறித்து அவரது மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொறையாறு,

நாகை மாவட்டம், பொறையாறு அருகே புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன்(வயது 43). இவர், தரங்கம்பாடியில் மேடை அலங்காரம் செய்யும் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், மோனிஷா(21) என்ற மகளும், வருண்(19), விமல்(17) என்ற 2 மகன்களும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர். தனது மகள், மகன் களுடன் விஜயலட்சுமி தரங்கம்பாடி ஆற்றங்கரை தெருவில் தனியாக வசித்து வருகிறார்.

தனது கணவரின் மேடை அலங்கார தொழிலுக்கு போட்டியாக விஜயலட்சுமி தரங்கம்பாடி காமராஜர் சாலையில் புதிதாக கடையை தொடங்கி, அந்த கடையை தனது இளைய மகன் விமலை நிர்வாகம் செய்ய வைத்துள்ளார். இந்த நிலையில் விஜயலட்சுமி தொடங்கிய தொழில் சரிவர நடைபெறவில்லை என்றும் மதியழகனுக்கு நல்லபடியாக தொழில் நடந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் மதியழகன் நேற்று முன்தினம் தரங்கம்பாடி அருகே வெள்ளக்கோவில் பகுதியில் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார், அங்கு சென்று மதியழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மதியழகனின் தாய் வள்ளியம்மை, தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக பொறையாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவுப்படி சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு வந்தனா மேற்பார்வையில் பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், தொழில் போட்டியால் தந்தையை மகனே அடித்துக்கொன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் தனது கடையை பூட்டிவிட்டு மதியழகன் மோட்டார் சைக்கிளில் புதுப்பேட்டை கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை விமல் மற்றும் விஜயலட்சுமியின் அண்ணன் மகன் சத்திரியன் ஆகிய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தனர். மோட்டார் சைக்கிளை சத்திரியன் ஓட்டி சென்றார். வெள்ளக்கோவில் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்றபோது மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து இருந்த விமல், தனது தந்தை மதியழகனை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்னர் அவரது முகத்தை இரும்பு கம்பியால் அடித்து சிதைத்தார். தனது தந்தை இறந்ததை உறுதி செய்த பின்னர் விமலும், சத்திரியனும் அங்கிருந்து தப்பி சென்றனர். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அவர்கள் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் பொறையாறு போலீசார், மர்ம சாவை கொலை வழக்காக மாற்றி விஜயலட்சுமி, விமல், சத்திரியன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தொழில்போட்டியால் தந்தையை மகனே அடித்துக்கொன்ற சம்பவம் தரங்கம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story