கீழடியில் ஆய்வு செய்வதற்கு ஸ்டாலின் ஒன்றும் வல்லுனர் அல்ல எச்.ராஜா பேட்டி


கீழடியில் ஆய்வு செய்வதற்கு ஸ்டாலின் ஒன்றும் வல்லுனர் அல்ல எச்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 28 Sep 2019 11:15 PM GMT (Updated: 28 Sep 2019 7:40 PM GMT)

கீழடியில் ஆய்வு செய்வதற்கு ஸ்டாலின் ஒன்றும் வல்லுனர் அல்ல என்று எச்.ராஜா கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் தேச ஒற்றுமை விழிப்புணர்வு இயக்கம் சார்பில், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சமீப காலமாக இந்து விரோத போக்கு அதிகரித்து வருகிறது. பகவத் கீதை உள்ளிட்டவற்றை இழிவாக பேசுவது கண்டிக்கத்தக்கது. வைகோ தேசத்துரோகி என்று நான் கூறவில்லை. நீதிமன்றமே அவர் ஒரு தேசத்துரோகி என்று கூறியுள்ளது. தி.மு.க. மற்றும் அதன் இலவச இணைப்பு கட்சிகள் அனைத்தும் இந்து விரோத தீய சக்திகள். குரான் மற்றும் பைபிளை பற்றி அவர்கள் விமர்சனம் செய்யாதது அதன் மேல் உள்ள மரியாதைக்காக அல்ல. அதற்கு எதிர்வினை வரும் என்பதற்காக தான் அவர்கள் இதுவரை பேசவில்லை.

அகழ்வாராய்ச்சி

இந்துக்களை மட்டும் குறிவைத்து பேசினால் எதிர்காலத்தில் இந்த கட்சிகள் எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் ஆரிய திராவிட இன பாகுபாடு தவிடுபொடி ஆகி விட்டது. தற்போது 15 அடி ஆழத்தில் தான் அகழ்வாராய்ச்சி நடந்து உள்ளது. தமிழக அரசு இதை நிறுத்தாமல் 33 அடி வரை அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும். அப்போதுதான் முழுமையான பழமையான நாகரிகம் வெளிப்படும்.

இந்த விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்பது குறித்து நான் பேசவில்லை. ஸ்டாலின் வந்து கீழடியில் ஆய்வு செய்வதற்கு அவர் ஒன்றும் வல்லுனர் அல்ல. இதில் என்ன அரசியல் செய்வதற்கு. அமைச்சர் பாண்டியராஜன் மத்திய அரசிடம் கீழடி குறித்து பேசி உள்ளார். மத்திய அரசு கீழடி அகழ்வாராய்ச்சிக்கு நிதி உதவி அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அ.தி.மு.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளது. தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story