சேலத்தில் தொற்றுநோய் தடுப்பு பணிகள்: தொழிற்சாலை, குடியிருப்பு பகுதிகளில் ஆணையாளர் ஆய்வு


சேலத்தில் தொற்றுநோய் தடுப்பு பணிகள்: தொழிற்சாலை, குடியிருப்பு பகுதிகளில் ஆணையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 29 Sep 2019 7:06 AM GMT (Updated: 29 Sep 2019 7:06 AM GMT)

சேலத்தில் தொற்று நோய் தடுப்பு பணிகள் குறித்து தொழிற்சாலை, குடியிருப்பு பகுதிகளில் ஆணையாளர் சதீ‌‌ஷ் ஆய்வு நடத்தினார்.

சேலம், 

சேலம் மாநகராட்சி பகுதிகளில் தீவிர தொற்று நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து வார்டுகளிலும் துப்புரவு பணிகள், சாக்கடை கால்வாய்களை தூர்வாருதல், குடியிருப்பு பகுதிகள் மற்றும் காலிமனைகளில் உள்ள உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள், வாகன பணிமனைகளில் உள்ள பயன்படாத டயர்கள் போன்றவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கொண்டலாம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட மணியனூர் பகுதியில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் தொற்றுநோய் தடுப்பு மற்றும் சுகாதார பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் சதீ‌‌ஷ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அந்த பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் ஆணையாளர் ஆய்வு செய்தார். அப்போது அவர், நீரை சேமித்து வைக்கப்படும் தொட்டிகள், பாத்திரங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்றும், தேவையற்ற பொருட்களை அகற்றிட வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதுகுறித்து ஆணையாளர் சதீ‌‌ஷ் கூறியதாவது:-

மாநகராட்சி பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் திரையரங்குகள், தனியார் ஆஸ்பத்திரிகள், தனியார் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள், தேநீர் விடுதிகள், உணவகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், வாகனம் நிறுத்தங்கள் மற்றும் பழுது நீக்கும் பணிமனைகளில் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அங்கு குப்பைகள் மற்றும் தேங்கியுள்ள மழைநீர் போன்றவைகள் அகற்றப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story