ஆரணியில் பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த தாய், கள்ளக்காதலன் கைது - பரபரப்பு வாக்குமூலம்


ஆரணியில் பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த தாய், கள்ளக்காதலன் கைது - பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 30 Sept 2019 4:15 AM IST (Updated: 29 Sept 2019 11:52 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த தாய், கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

ஆரணி, 

ஆரணியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் குமார் (வயது 40), கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி சோலையம்மாள் (35). இவர்களுக்கு ஒரு மகளும், 3 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் சோலையம்மாள் மீண்டும் கர்ப்பமானார். கடந்த 14-ந் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு 15-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் 16-ந் தேதி மருத்துவமனையில் இருந்த சோலையம்மாள் பச்சிளம் குழந்தையுடன் மாயமானார். இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சோலையம்மாளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

குழந்தையை கொன்று புதைப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சேவூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சோலையம்மாள் தனது கள்ளக்காதலன் பாபு (49) என்பவருடன் வந்தார்.

அப்போது அவர்கள், பச்சிளம் பெண் குழந்தையை கொலை செய்து புதைத்து விட்டோம் என்று கிராம நிர்வாக அலுவலர் சரவணனிடம் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சோலையம்மாள் கூறியதாவது:-

எனது கணவரின் அண்ணன் பாபுவுக்கும், எனக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்தது. இதனால் எனக்கு கடந்த 15-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையால் எனது குடும்பத்தில் தகராறு ஏற்படும் என்று நினைத்து 16-ந் தேதி காலையில் மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரியாமல் பச்சிளம் குழந்தையை தூக்கிக்கொண்டு நானும், பாபுவும் ஆரணியை அடுத்த சேவூர் மயான பகுதியில் உள்ள நிலத்திற்கு வந்தோம்.

பின்னர் குழந்தையை துணியால் மூடி கொலை செய்து நிலத்தில் புதைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டோம். இந்த நிலையில் போலீசார் எங்களை தேடுவதை அறிந்து சேவூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் சரண் அடைந்துவிட்டோம்.

இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.

இதனையடுத்து போலீசார் சோலையம்மாள் மற்றும் கள்ளக்காதலன் பாபு ஆகியோரை கைது செய்தனர்.

ஆரணி வருவாய் கோட்டாட்சியர் மைதிலி, தாசில்தார் தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் கொலை செய்து புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடலை இன்று (திங்கட்கிழமை) தோண்டி எடுத்து மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்ய இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story