சட்டசபை இடைத்தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா அரசு கவிழும் - சித்தராமையா ஆரூடம்


சட்டசபை இடைத்தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா அரசு கவிழும் - சித்தராமையா ஆரூடம்
x
தினத்தந்தி 30 Sept 2019 5:00 AM IST (Updated: 30 Sept 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா அரசு கவிழும் என்று சித்த ராமையா ஆரூடம் கூறியுள்ளார்.

கலபுரகி,

கலபுரகியில் நேற்று குருப சமூகத்தினரின் மாநாடு நடைபெற்றது. இதில் அந்த சமூகத்தை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு பேசினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பா.ஜனதாவின் விருப்பப்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. 2 மாதங்களுக்கு பிறகு நடைபெறும் தேர்தலுக்கு இப்போதே தேதியை அறிவித்துள்ளனர். எனது அரசியல் வாழ்க்கையில் இவ்வாறு தேர்தல் தேதியை அறிவித்ததை நான் பார்த்தது இல்லை. பா.ஜனதாவுக்கு உதவும் வகையில் தேர்தல் ஆணையம் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது.

சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று தேவேகவுடா, குமாரசாமி ஆகியோர் ஏற்கனவே கூறிவிட்டனர். அதனால் 15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும். இடைத்தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா அரசு கவிழும்.

கர்நாடகத்தில் வெள்ளம் ஏற்பட்டு 50 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. மத்திய அரசு இதுவரை நிவாரண நிதி ஒதுக்கவில்லை. முதல்- மந்திரி எடியூரப்பா, மத்திய அரசு நிவாரண நிதியை இன்று வழங்கும், நாளை வழங்கும் என்று கூறியபடியே உள்ளார். ஆனால் மத்திய அரசு நிதியை ஒதுக்கவே இல்லை.

காங்கிரசில் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். அனைவரும் இணைந்து தேர்தலை எதிர்கொள்வோம்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story