‘கடல் வழியாக வந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்’ - ராஜ்நாத் சிங் எச்சரிக்கை


‘கடல் வழியாக வந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்’ - ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 Sep 2019 11:15 PM GMT (Updated: 29 Sep 2019 8:42 PM GMT)

கடல் வழியாக வந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

மும்பை, 

மும்பை கடற்படை தளத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் ஐ.என்.எஸ்.காந்தேரி என்ற நீர்மூழ்கி கப்பலை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் ராஜ்நாத் சிங் அரபிக்கடல் பகுதியில் ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா விமானம் தாங்கி போர்க்கப்பலில் பயணம் மேற்கொண்டார்.

நேற்று முன்தினம் இரவு கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் அவர் அந்த போர்க்கப்பலிலேயே தங்கினார்.

கடற்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களின் பயிற்சியையும் அவர் பார்வையிட்டார்.

நேற்று காலை மற்ற வீரர்களுடன் சேர்ந்து ராஜ்நாத் சிங் அந்த கப்பலில் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்தார்.

பின்னர், அந்த கப்பலில் உடன் வந்திருந்த நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உலகில் தற்போதுள்ள சூழ்நிலையில் கிட்டத்தட்ட எல்லா நாடுகளின் கடலோர பகுதிகளுக்குமே பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ளது. இந்தியாவிலும் கடலோர பகுதிகள் வழியாக வந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து உள்ளது. எனவே ஒவ்வொரு நாடும் தங்கள் கடலோர பகுதியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

அண்டை நாட்டின் மூலம் இந்தியாவின் கடலோர பகுதிக்கு அச்சுறுத்தல் உள்ள போதிலும் நமது கடல் பகுதியை பாதுகாப்பதில் இந்திய கடற்படை உறுதியாகவும் விழிப்புடனும் இருக்கிறது. எனவே மும்பை தாக்குதல் சம்பவம் போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடைபெறாது.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், யோகாவுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்து இருப்பதாகவும், இதன் பெருமை எல்லாம் பிரதமர் மோடியைத்தான் சேரும் என்றும் தெரிவித்தார்.

Next Story