நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார் - வசந்தகுமார் எம்.பி. பேட்டி


நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார் - வசந்தகுமார் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 29 Sep 2019 11:30 PM GMT (Updated: 29 Sep 2019 8:42 PM GMT)

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று வசந்தகுமார் எம்.பி. கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் காங்கிரஸ் செயல் தலைவர் வசந்தகுமார் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள ரூபி மனோகரன் 100 சதவீதம் நிச்சயம் வெற்றி பெறுவார். அவருடைய வெற்றிக்கு கடந்த 8 ஆண்டுகளாக தொகுதியில் நான் செய்த பணிகள் உதவிக்கரமாக இருக்கும். நாங்குநேரி தொகுதியில் குளம் தூர்வாருதல், புதிய குளங்களை உருவாக்குதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நாங்குநேரி தொகுதியின் வளர்ச்சிக்கு புதிய தொழிற்சாலைகள் வர வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய துறைமுகம் அமைப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. அரசானது எல்லா திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது. காங்கிரஸ் ஆட்சியில் கூட சேது சமுத்திர திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியாமல் போனது. ஆகவே திட்டத்தை சரியாக செயல்படுத்த முடியவில்லை எனில் அதை அரசு ஒத்துக்கொள்ள வேண்டும். சேதுசமுத்திர திட்டம் சரியில்லாத திட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழக அமைச்சர் ஒருவர், ஒரு எம்.பி.யை பற்றி தரக்குறைவாக பேசி உள்ளார். அமைச்சர் என்பவர் தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களின் பிரதிநிதி ஆவார். தரம் இல்லாதவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் இப்படித்தான் தரக்குறைவாக பேசுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து வசந்தகுமார் எம்.பி. நெல்லையில் நிருபர்களிடம் கூறுகையில், “நாங்குநேரி தொகுதியில் கடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான நான் செய்த சாதனைகளையும், காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளையும் கூறி மக்களிடம் வாக்கு கேட்போம். ஆளும் கட்சியினர் பணப்பலத்தால் வெற்றி பெற முடியும் என நினைக்கிறார்கள். அதையும் மீறி நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார். தேர்தல் பிரசாரத்திற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்“ என்றார்.

அப்போது நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story