கன்னியாகுமரியில் மர்மஆசாமி பிடிபட்டார் நாசவேலைக்கு சதியா? போலீஸ் விசாரணை


கன்னியாகுமரியில் மர்மஆசாமி பிடிபட்டார் நாசவேலைக்கு சதியா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 29 Sep 2019 10:15 PM GMT (Updated: 2019-09-30T02:25:56+05:30)

கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே மர்ம ஆசாமி பிடிபட்டார். அவர் நாசவேலையில் ஈடுபட சதி செய்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டின் குளியலறையில் சம்பவத்தன்று ஒரு வாலிபர் பதுங்கி இருந்தார். அவர் நிர்வாண நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர் உடனே கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபரை பிடித்தனர். பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் அவர் போலீசாரிடம் எதுவும் பேசாமல் மவுனம் சாதித்துள்ளார். பிடிபட்ட வாலிபர் பார்ப்பதற்கு வடமாநிலத்தை சேர்ந்தவர் போல இருந்தார். எனவே அவரிடம் இந்தி மொழியில் போலீசார் விசாரணை நடத்தினர்.

நாசவேலைக்கு சதியா?

எனினும் அவர் ஒன்றும் தெரியாதவர் போல இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்க கூடும் என்று எண்ணிய போலீசார் உடனே கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவருக்கு மனநல குறைபாடு இல்லை என்பது தெரிய வந்தது. வாலிபர் தொடர்ந்து மவுனம் சாதிப்பதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட வாலிபர் ஏதேனும் நாச வேலையில் ஈடுபடுவதற்காக கன்னியாகுமரி வந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. ஆனால் அவர் எதற்காக நிர்வாண நிலையில் பதுங்கியிருந்தார்? என்பது மர்மமாக உள்ளது. வாலிபரிடம் தொடர் விசாரணை நடத்தியதில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே அந்த மர்மஆசாமியிடம் உளவுபிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். கன்னியாகுமரியில் மர்ம ஆசாமி பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story