தர்மபுரியில் பட்டா நிலத்தில் கால்வாய் அமைக்க எதிர்ப்பு தாசில்தாரை, பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


தர்மபுரியில் பட்டா நிலத்தில் கால்வாய் அமைக்க எதிர்ப்பு தாசில்தாரை, பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Sept 2019 4:30 AM IST (Updated: 30 Sept 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் பட்டா நிலத்தில் கால்வாய் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் பெரும்பாலான ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தர்மபுரி நகரில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இந்த நிலையில் பிடமனேரி ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாகவும், பலத்த மழை காரணமாகவும் தர்மபுரி பென்னாகரம் ரோட்டில் உள்ள சத்யா நகர், ஆவின் நகர், நந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

இந்த மழை காரணமாக அந்த பகுதிக்கு செல்லும் சாலை தண்ணீரில் மூழ்கியது. இதனிடையே நகராட்சி அதிகாரிகள் தண்ணீரை வெளியேற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனிடையே குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்றவும், பிடமனேரி ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீரை ராமாக்காள் ஏரிக்கு கொண்டு செல்ல புதிய நீர்வழி கால்வாய் அமைக்க கலெக்டர் மலர்விழி உத்தரவின் பேரில் வருவாய்துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

தாசில்தார் முற்றுகை

இந்த நிலையில் ஆவின் நகர், சத்யா நகர் பகுதிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் அமைக்கும் பணியில் நேற்று வருவாய்துறையினர் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பட்டா நிலத்தில் கால்வாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். பட்டா நிலத்தில் கால்வாய் அமைக்க கூடாது என்றும், ஏற்கனவே உள்ள நீர்வழி கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தொடர்ந்து கால்வாய் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தர்மபுரி தாசில்தார் சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்கள் நலன் கருதி வீடுகளை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றத்தான் கால்வாய் அமைக்கப்படுகிறது என்று தாசில்தார் கூறினார். அதற்கு எங்கள் பட்டா நிலத்தில் கால்வாய் அமைக்ககூடாது. பட்டா நிலத்தில் இல்லாமல் மாற்று பாதையில், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் கால்வாய் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திதாசில்தாரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து மாற்று பாதையில் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் கூறினார். இதையடுத்து கால்வாய் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story