திருமாந்துறையில் விவசாயிகள் சங்கம் சார்பில் நிலமீட்பு போராட்டம்


திருமாந்துறையில் விவசாயிகள் சங்கம் சார்பில் நிலமீட்பு போராட்டம்
x
தினத்தந்தி 1 Oct 2019 4:30 AM IST (Updated: 1 Oct 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

திருமாந்துறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நிலமீட்பு போராட்டம் நடைபெற்றது.

மங்களமேடு,

கடந்த 2007-ம் ஆண்டு இந்திய அரசின் பெருவணிகத்துறையும், ஆந்திராவை சேர்ந்த ஜி.வி.கே. குழுமமும் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், திருமாந்துறை பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க சுமார் 3 ஆயிரத்து 100 ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தியது. ஆனால் 13 ஆண்டுகளாகியும் திட்டம் தொடங்கப்படவில்லை. மேலும் ஒப்பந்தப்படி விவசாயிகளுக்கு வீட்டு மனையும், வேலை வாய்ப்பும் வழங்கப்படவில்லை. கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் கருவேல மரக்காடாக மாறிப்போனது. இதனால் விவசாயிகள் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் நிலத்தை ஒப்படைக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், நிலம் கொடுத்த விவசாயிகள் சார்பில் நேற்று திருமாந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சின்னதுரை, மாநில செயலாளர் சாமி நடராஜன், மாவட்ட செயலாளர் செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்பு விவசாயிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் திருமாந்துறையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க நிலம் கொடுக்கப்பட்ட இடத்தில் உள்ள செடி, கொடிகளை வெட்டி நில மீட்பு போராட்டம் செய்தனர். மேலும் நாளை (இன்று) முதல் நிலங்களை சீர்படுத்தி விவசாயம் செய்யப்போவதாக அறிவித்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

இதில் கரும்பு விவசாயிகள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய அணி மாநில செயலாளர் வீர செங்கோலன், மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிவேல், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் தங்கராசு, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முஜிபர்ரகுமான், செய்தி தொடர்பாளர் சாகுல்அமீது உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தையொட்டி அப்பகுதியில் மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story