மீன்வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் பண்ணை-குட்டைகளை மீன்வளத்துறையில் பதிவு செய்ய வேண்டும் கலெக்டர் தகவல்


மீன்வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் பண்ணை-குட்டைகளை மீன்வளத்துறையில் பதிவு செய்ய வேண்டும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 1 Oct 2019 4:30 AM IST (Updated: 1 Oct 2019 1:08 AM IST)
t-max-icont-min-icon

மீன்வளர்ப்பில் ஈடுபட்டு உள்ளவர்கள் தங்களது பண்ணை, குட்டைகளை மீன்வளத்துறையில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

கிப்ட் திலேப்பியா என்றழைக்கப்படும் மரபு வழி மேம்படுத்தப்பட்ட பண்ணை திலேப்பியா மீன்கள் அதிக அளவில் புரதங்களும், உடலுக்கு நன்மை தரக்கூடிய அபரிமிதமான விட்டமின் சத்துகளும் நிறைந்த மீன் இனமாகும். குறுகிய காலத்தில் வேகமாக வளரும் இம்மீன்கள் அனைத்து வகையான நீரின் தன்மை மற்றும் தட்பவெப்ப நிலையில் வளருவதுடன் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி திறன் கொண்டவை.

மேலும் இந்த மீன் இனத்தின் மீன்குஞ்சுகள் அனைத்தும் வேகமாக வளரக்கூடிய ஆண் மீன்களாக இருக்கும் வகையில், விற்பனை செய்யப்படுவதால், இன பெருக்கம் செய்வது தவிர்க்கப்பட்டு, இந்த மீன் இனம் உண்ணும் உணவுகள் அனைத்தும் உடல் வளர்ச்சிக்கும் பயன்பட்டு விரைவில் வளர்ச்சி அடைந்து விடுவதுடன் நோய் எதிர்ப்பு திறன் காரணமாக இந்த மீன்களின் பிழைப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இவ்வாறாக விரைவில் வளரும் தன்மை உள்ளதாலும், மீன்வளர்ப்பு செய்வோருக்கு குறுகிய காலத்தில் அதிக லாபம் மற்றும் வருவாயை ஈட்டித் தரக்கூடிய மீன் இனமாகவும் திகழ்கிறது.

மீன்வள துறையில் பதிவு

மேற்காண்டவாறு மீன் வளர்ப்பு செய்து கூடுதல் லாபம் பெற்றிட “கிப்ட் திலேப்பியா” மீன்குஞ்சுகள் தரமான மற்றும் கலப்பற்ற மீன்குஞ்சுகளாக இருப்பது அவசியமாகும். அத்தகைய தரமான மீன்குஞ்சுகள் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி அரசு மீன்குஞ்சு உற்பத்தி பண்ணையிலும், மதுரையில் இயங்கி வரும் அரசு அனுமதி பெற்ற தனியார் மீன்குஞ்சு பண்ணையில் மட்டுமே கிடைக்கும். இவ்விரு பண்ணைகள் தவிர பிற இடங்களில் பெறப்படும் கிப்ட் குஞ்சுகள் விரைவில் இனப்பெருக்கம் செய்வதுடன் வளர்ச்சி மிகவும் குறைந்து காணப்படும்.

மேலும் ஏற்கனவே கிப்ட் திலேப்பியா மீன்வளர்ப்பில் ஈடுபட்டு உள்ளவர்கள் தங்களது பண்ணை, குட்டைகளை மீன்வளத்துறையில் பதிவு செய்ய வேண்டும். எனவே, கிப்ட் திலேப்பியா, மீன்வளர்ப்பில் ஈடுபட்டு உள்ளவர்கள் புதுக்கோட்டை லெட்சுமிபுரம் முதல் வீதியில் உள்ள மீன்வள உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ விவரம் தெரிவித்து குளத்தை அவசியம் பதிவு செய்திட வேண்டும். விவசாயிகள் மற்றும் மீன் வளர்ப்போர் தரமான கிப்ட் திலேப்பியா இன மீன்குஞ்சுகளை பெறவும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story