குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது


குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 30 Sep 2019 10:30 PM GMT (Updated: 30 Sep 2019 9:15 PM GMT)

குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, குணசீலம் கிராமத்தில் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில் உள்ளது. தென்திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த கோவிலில், மனநலம் காக்க மண்ணுலகில் அவதரித்த பிரசன்ன வெங்கடாசலபதி குணசீல மகரிசிக்கு காட்சியளித்த தினமான புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா 11 நாட்கள் நடைபெறும்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முன்னதாக காலை 7 மணிக்கு புண்யாகவாசனம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து காலை 9.30 மணியளவில் கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக வெள்ளை நிற துணியில் பொறிக்கப்பட்டிருந்த கருடன் படத்திற்கு துளசி மாலை அணிவிக்கப்பட்டு, வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் காண்பித்தனர்.

தேரோட்டம்

அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு பெருமாள் புறப்பாடு கண்டு அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர், ஏகாந்த மண்டபத்தில் கும்ப தீபாராதனை நடைபெற்று கண்ணாடி அறையில் எழுந்தருளி சேவை சாதித்தார். இன்று(செவ்வாய்க்கிழமை) சிம்ம வாகனம், நாளை(புதன்கிழமை) அனுமந்த வாகனம், 3-ந்தேதி கருட வாகனம், 4-ந் தேதி சே‌‌ஷ வாகனம், 5-ந் தேதி கஜ வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 6-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 7-ந் தேதி குதிரை வாகனம் என பெருமாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.8-ந் தேதி காலை 5 மணிக்கு புண்ணியாக வாசனம், திருவாராதனம் நடைபெற்று, பெருமாள் உபநாச்சியாருடன் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகள் சார்பில் பிச்சுமணி அய்யங்கார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story