சூளகிரி அருகே அரசு பஸ்- கன்டெய்னர் லாரி மோதல்: டிரைவர், கண்டக்டர் உள்பட 4 பேர் பலி - 30 பேர் படுகாயம்
சூளகிரி அருகே அரசு பஸ்சும், கன்டெய்னர் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் பஸ் டிரைவர், கண்டக்டர் உள்பட 4 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
ஓசூர்,
திருவண்ணாமலையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. அந்த பஸ் கிருஷ்ணகிரி வழியாக நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. பஸ்சை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா பண்ணந்தூரை சேர்ந்த வேடியப்பன் (வயது 41) என்ற டிரைவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கிட்டலப்பட்டியை சேர்ந்த சுதாகர் (45) என்பவர் இருந்தார். பஸ்சில் 31 பயணிகள் பயணம் செய்தனர்.
சூளகிரி அருகே சாமல்பள்ளம் பக்கமாக பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை கர்நாடக மாநிலம் டும்கூர் மாவட்டம் தாவேரிகெரவீரா பகுதியை சேர்ந்த பரத்குமார் (26) என்பவர் ஓட்டி வந்தார். இந்தநிலையில் திடீரென்று லாரியின் முன்புற டயர் வெடித்தது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையின் மறு திசைக்கு (கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை) வந்தது. அந்த நேரம் லாரியும், ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் பஸ்சும், லாரியும் சாலையில் கவிழ்ந்தன. இந்த கோர விபத்தில் பஸ்சின் டிரைவர் வேடியப்பன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். கண்டக்டர் சுதாகர், லாரி டிரைவர் பரத்குமார் மற்றும் பயணிகள் என 33 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் கண்டக்டர் சுதாகர் மற்றும் பயணியான கிருஷ்ணகிரி மாவட்டம் நந்திபண்டா கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்னகண்ணு (65) ஆகிய 2 பேரும் பலியானார்கள். மேலும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெங்களூரு பனசங்கரியைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவரின் மனைவி சாந்தி (52) சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
மேலும் விபத்தில் சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகர் உதயகுமார் (38), சூளகிரி அனுசோனை பிரசாத் (24), நவீன்குமார் (26), செங்கம் மாரப்பன் (34), ஏழுமலை (36), விழுப்புரம் மாவட்டம் கப்பங்கோடி மூர்த்தி (28), ஈரோடு சத்யமங்கலம் கோபால் (62), ஓசூர் ஈஸ்வர் நகர் ஆரோக்கியசாமி (78), கர்நாடக மாநிலம் டும்கூர் பரத்குமார் (26) (லாரி டிரைவர்) உள்பட 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து விபத்துக்குள்ளான லாரி, பஸ் ஆகியவற்றை ராட்சத கிரேன் மூலமாக அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து காரணமாக கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் பிரபாகர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய கலெக்டர், சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க அவர் உத்தரவிட்டார்.
அதே போல கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டு, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார். மேலும் விபத்து நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ள வீடியோ பதிவுகளை ஆய்வு செய்தார். உதவி கலெக்டர் தெய்வநாயகி, தாசில்தார்கள் ஜெய்சங்கர் (கிருஷ்ணகிரி), ரெஜினாமேரி (சூளகிரி) ஆகியோரும் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
Related Tags :
Next Story