கம்பி மீது ஆட்சி நடத்தும் எடியூரப்பா, மக்களின் கஷ்டங்களை தீர்க்க வேண்டும் - குமாரசாமி கிண்டல்
கம்பி மீது ஆட்சி நிர்வாகத்தை நடத்தும் எடியூரப்பா, மக்களின் கஷ்டங்களை தீர்க்க வேண்டும் என்று குமாரசாமி கிண்டல் செய்துள்ளார்.
பெங்களூரு,
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பல்வேறு ஆசைகளுக்கு உட்படுத்தி, கூட்டணி அரசை வீழ்த்திவிட்டு நீங்கள் (எடியூரப்பா) முதல்-மந்திரி பதவியில் அமர்ந்துள்ளர்கள். இப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜனதாவினர் இடையே சிக்கிக்கொண்டு, கம்பி மீது நடந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறீர்கள்.
முதல்-மந்திரி அவர்களே, கம்பி மீது இருந்தபடியே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாருங்கள். வீடு, வாசல்களை இழந்த மக்களுக்கு உரிய உதவி செய்ய முடியாவிட்டால், உங்களை அந்த மக்களே கம்பி மீது இருந்து கீழே இறக்கிவிடுவார்கள். கம்பி மீது நீங்கள் நடந்து கொண்டிருங்கள். அதற்காக எந்த முடிவும் எடுக்காமல் இருந்தால் உங்களுக்கு ஆபத்து தான்.
நீங்கள் முதல்-மந்திரி பதவிக்கு வந்த பிறகு பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களையும் கொஞ்சம் கவனியுங்கள். கம்பி மீது ஆட்சி நிர்வாகத்தை நடத்தும் நீங்கள், மக்களின் கஷ்டங்களை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெள்ளம் ஏற்பட்டு 2 மாதங்கள் ஆகியும் பாதிக்கப்பட்ட மக்களின் கஷ்டங்களை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story