டாக்டர் ஷபியிடம் 2-வது நாளாக விசாரணை: கடந்த ஆண்டும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - சி.பி.சி.ஐ.டி. போலீஸ் திடுக்கிடும் தகவல்


டாக்டர் ஷபியிடம் 2-வது நாளாக விசாரணை: கடந்த ஆண்டும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - சி.பி.சி.ஐ.டி. போலீஸ் திடுக்கிடும் தகவல்
x
தினத்தந்தி 2 Oct 2019 4:45 AM IST (Updated: 2 Oct 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கிய வாணியம்பாடி டாக்டர் ஷபியிடம் 2-வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்விலும் ஆள்மாறாட்டம் நடந்து இருக்கலாம் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

தேனி,

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த வழக்கில் சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா (வயது 20), அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கடந்த 26-ந்தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களை தொடர்ந்து சென்னையை சேர்ந்த மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், ராகுல், அவருடைய தந்தை டேவிஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த தகவலின் பேரில், வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த டாக்டர் ஷபி (48) என்பவர் கடந்த 29-ந்தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் பிடிக்கப்பட்டார். அவருடைய மகன் முகமது இர்பான் என்பவரும் ஆள்மாறாட்டம் செய்து தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்தது தெரியவந்தது.

இதையடுத்து, டாக்டர் ஷபி நேற்று முன்தினம் தேனி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டார். அவரிடம் அங்கு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவர் வாணியம்பாடியை சேர்ந்த வேதாச்சலம் என்பவர், கேரளாவை சேர்ந்த ரஷீத் என்ற இடைத்தரகரை தனக்கு அறிமுகம் செய்ததாகவும், அதன்பேரில் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ஒரு மாணவருக்கு தலா ரூ.20 லட்சம் இடைத்தரகரிடம் கொடுக்கப்பட்ட விவரத்தையும் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

ஷபியிடம் நேற்று 2-வது நாளாக விசாரணை தொடர்ந்தது. அப்போது அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இடைத்தரகருக்கு பணம் எந்த வகையில் கொடுக்கப்பட்டது? எங்கு வைத்து கொடுக்கப்பட்டது? இடைத்தரகர்கள் மட்டுமின்றி, கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கையின் போது வேறு யாருக்கேனும் பணம் கொடுக்கப்பட்டதா? என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். நேற்று மாலை வரை விசாரணை நீடித்தது.

அதேபோன்று, ஷபியிடம் இருந்து இடைத்தரகர்கள் வேதாச்சலம், ரஷீத் ஆகியோரின் செல்போன் எண்களை போலீசார் பெற்றுள்ளனர். அந்த எண்கள் மூலம் ‘நீட்’ தேர்வு நடந்த காலகட்டத்தில் அவர்கள் இருவரும் யார்? யாருக்கெல்லாம் அடிக்கடி பேசி இருக்கிறார்கள்? என்ற பட்டியலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்து வருகின்றனர்.

மேலும், அந்த செல்போன் எண்கள் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறியும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இடைத்தரகர் ரஷீத்தின் செல்போன் எண், மாணவர் உதித்சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்தே அணைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் முக்கிய நபராக இடைத்தரகர் ரஷீத் கருதப்படுகிறார். அவர் மூலமாக தான் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது. ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய நபர்களையும் அவர் தான் ஏற்பாடு செய்து இருக்கலாம் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் கருதுகின்றனர். ரஷீத் சிக்கினால் தான் இந்த வழக்கில் பல்வேறு மர்மங்கள் விலக வாய்ப்புள்ளது.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரஷீத்தை டாக்டர் ஷபி தான் மற்ற மாணவர்களின் பெற்றோருக்கு அறிமுகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. ரஷீத் நம்பகத்தன்மையானவர் என்றும், அவரிடம் பணம் கொடுத்தால் நிச்சயம் மருத்துவ கல்லூரியில் எந்த பிரச்சினையும் இன்றி இடம் கிடைத்து விடும் என்றும் நம்பி பணத்தை கொடுத்துள்ளனர். இடைத்தரகர் ரஷீத் கடந்த ஆண்டும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை நடத்தி இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அவர் சிக்கினால் தான் உண்மை நிலை என்னவென்று தெரியவரும்” என்றார்.

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மாணவர் முகமது இர்பானும் ஆள்மாறாட்டத்தில் சிக்கியதால், அந்த கல்லூரி முதல்வருக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, அந்த கல்லூரி முதல்வர் சீனிவாசராஜ், துணை முதல்வர் முருகன் ஆகியோர் நேற்று காலை 10.20 மணியளவில் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் ஆஜர் ஆனார்கள்.

அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். விசாரணையின் போது கல்லூரி முதல்வர் சீனிவாசராஜ், மாணவர் முகமது இர்பான் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார். அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. கல்லூரி முதல்வர், துணை முதல்வர் இருவரிடமும் பிற்பகல் 2.30 மணி வரை விசாரணை நடந்தது. அதன்பிறகு விசாரணை முடிந்து அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

விசாரணையின்போது, மாணவர் முகமது இர்பான் கடந்த 8-ந்தேதியில் இருந்து கல்லூரிக்கு வரவில்லை என்றும், மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகள் உத்தரவுப்படி சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி நடந்தபோது, அதிலும் அவர் பங்கேற்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணை குறித்து தர்மபுரியில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தர்மபுரி கல்லூரி முதல்வர் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, மாணவர் முகமது இர்பான் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் யாருக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.

Next Story